‘வடக்கே வன்னியர், தெற்கே தேவேந்திரர்’ என்று ஒரு காலத்தில் மருத்துவர் ராமதாசு முழக்கமிட்டார். அந்த இரு சாதி பிரச்சினைகள்தாம் இப்போதைய இடைத்தேர்தலில் பூதாகரமாகியுள்ளன.
அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஒரு விளையாட்டு போட்டி. அதில், வாக்குறுதிகள் ஆட்டத்தின் விறுவிறுப்பை ஏற்ற ஒலிக்கும் உற்சாக ஓசைகள். இப்படித்தான் கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது மள்ளர் குலத்தவரான தேவேந்திர குல வேளாளர் சாதியினர், தங்களின் அனைத்து பிரிவுகளையும் ஒருசேர ஒரே பெயரில் அழைக்கவேண்டும் என்ற சட்டரீதியான அங்கீகாரம் கேட்டனர்.
இந்த ஆட்சேபமற்ற சமூக நீதி கோரிக்கையை என்ன காரணத்தினாலோ பாஜகவும், அதிமுகவும் நிறைவேற்ற தவறிவிட்டன. இதனால் ஆத்திரமடைந்த அச்சாதியினர் நாங்குநேரி தேர்தலில் புறக்கணிப்பு நிலைப்பாட்டை எடுத்துள்ளனர். இதுவரை கோரிக்கையில் அவர்கள் உறுதியாக உள்ளனர்.
அதேபோல், வடக்கே மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான 20 விழுக்காடு இட ஒதுக்கீட்டில், மக்கள் தொகை மிகுந்த வன்னியருக்கு உள் ஒதுக்கீடு நியாயமான சமூக நீதி கோரிக்கையாக இருக்கிறது. இதையும் சந்தர்ப்பமாக தேர்தலில் திமுக முன்வைத்து பிரச்சாரம் செய்கிறது.
வடக்கே மருத்துவர் ராமதாசும், தெற்கே மருத்துவர் கிருஷ்ணசாமியும் இந்த கோரிக்கைகளில் திமுக, அதிமுகவினருக்கு எதிராக பேசி வருகின்றனர்.
வடக்கே வன்னியர்கள் தேர்தல் புறக்கணிப்பு செய்யவில்லை என்றாலும், முக ஸ்டாலின் அறிவிப்பு அவர்களின் வாக்களிக்கும் மனோபாவத்தில் கணிசமான மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. வன்னிய தலைவர் கோவிந்தசாமிக்கு மணி மண்டபம் என்று வேறு ஸ்டாலின் மற்றொரு வாக்குறுதியை முன்கூட்டி வழங்கி கவனத்தை தன்பால் திருப்பிவிட்டார்.
வன்னியர் சாதி சார்ந்த பாமகவின் ஆதரவையும் மீறி, அதிமுகவுக்கு எதிரான வலிமையான அஸ்திரமாக ஸ்டாலினின் வாக்குறுதி அமைந்துவிட்டது.
அதேபோல், தேவேந்திரர் சாதி சார்ந்த புதிய தமிழகம், தமிழக மக்கள் முன்னேற்ற கழக ஆதரவை அதிமுக இழக்கும் சூழல் உருவாகிவிட்டது.
இந்த இரு நிலைப்பாடுகளும் ஆளுங்கட்சியின் வெற்றி வாய்ப்பை பதம் பார்க்கும் பாதிப்புகளாகவே இருக்கின்றன. பணத்தால் மட்டும் இந்த பாதிப்பை மாற்றிவிடலாம் எனவும் நம்ப முடியவில்லை.













