தமிழகத்தில் திணிக்கப்படும் ஹிந்தியர்கள், தமிழர்கள் தள்ளி வைக்கப்படும் கொடுமை

0
1747

 

கடந்த 9ஆம் தேதி மதுரை அருகே உள்ள திருமங்கலம் ரயில் நிறுத்தத்தில் சிக்னல் கோளாறு ஏற்படுத்துள்ளது. இருப்பினும் அந்த ரயில்வே நிலைய அலுவலர் ஜெயக்குமார் மதுரையிலிருந்து நெல்லை நோக்கி செல்லும் ரயிலை அந்த வழித்தடத்தில் செல்ல அனுமதித்திருக்கிறார். அதேவேளையில், அந்த வழித்தடத்தில் சிக்னல் கோளாறு இருப்பதால் வேறு ரயில்களை அனுமதிக்க வேண்டாம் என கள்ளிக்குடி நிலைய அலுவலர் சிவசிங் மீனாவுக்கு தொலைபேசியில் தகவல் கொடுத்துள்ளார். ஆனால் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த சிவசிங் மீனாவிற்கோ ஜெயக்குமார் தமிழில் கூறியது புரியவில்லை. செங்கோட்டையிலிருந்து மதுரை செல்ல கள்ளிக்குடிக்கு வந்த பயணிகள் ரயிலை அனுப்புமாறு கூறியதாக நினைத்து அனுப்பியுள்ளார்.
சிவசிங் மீனாவிடம் தொலைபேசியில் பேசும்போது அவர் சரியாக புரிந்துகொள்ளவில்லை என்பதை நினைத்து சுதாரித்து கொண்ட திருமங்கலம் நிலைய அலுவலர் ஜெயக்குமார் கள்ளிக்குடி கேட் கீப்பரை தொடர்புகொண்டு தகவலை கூறியுள்ளார். அப்போது சற்றுமுன்புதான் அந்த ரயில் மதுரை நோக்கி சென்றது என கேட் கீப்பர் கூற, அதிர்ந்துபோன ஜெயக்குமார் திருப்பரங்குன்றம் ரயில் நிலைய அதிகாரியை தொடர்புகொண்டு இரண்டு ரயிலையும் நிறுத்த சொல்லியுள்ளார். இதனால் ஒரே தடத்தில் இரு ரயிலும் எதிரெதிரே நிறுத்தப்பட்டு பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
இதில், எந்த மாநிலத்தில் வேலை செய்கிறாரோ அந்த மொழி தெரியாத சிவசிங் மீனா மீது மட்டும் நடவடிக்கை எடுக்காமல், சமயோசிதமாக செயல்பட்டு விபத்தை தவிர்த்த ஜெயக்குமார் மீதும் நடவடிக்கை எடுத்துள்ளது ரயில்வே துறை. இதே ஜெயக்குமார் மும்பையில் வேலை செய்து, அங்குள்ள அதிகாரி இந்தியில் சொன்னதை புரிந்துகொள்ளாமல் இருந்திருந்தால் ‘பெரிய தேசிய மொழி’யான இந்தியை பேசிய அந்த அதிகாரி மீது நடவடிக்கை எடுத்திருப்பார்களா? சொந்த ஊரில் சொந்த மொழியில் பேசிய ஜெயக்குமார் மீது தவறா, அந்த ஊரில் மொழி தெரியாத அதிகாரியை நியமித்த ரயில்வேயின் தவறா?
தற்போது ரயில் நிலையங்களுக்கு இடையே தகவல்களை கொள்ள புது மொழியான ஆங்கிலத்தில் பரிமாறிக்கொள்ளுமாறு தெற்கு ரயில்வே ஆணையிட்டுள்ளது. அயல் மாநிலத்தவருக்கு புரியாததற்காக தாய் மொழியை மறக்கவேண்டிய நிலை. இதே அனுபவத்தைத்தான் சாதாரண பொதுமக்களும் அனுபவிக்கிறார்கள். இந்தி தெரியாவிட்டால் எந்த ஊருக்கும் ரயிலில் போக முடியாது. ஏனெனில், பெயர்தான் தென்னக ரயில்வேயே தவிர, அங்கு இருப்பதெல்லாம் வடவக அலுவலர்கள், அதிகாரிகள்தாம்.
அண்மையில் தென்னக இரயில்வே திருச்சி கோட்டத்தில், எலக்ட்ரிஷியன், பிட்டர், மெக்கானிக், வெல்டர் உள்ளிட்ட தொழிற்பழகுநர் இடங்களுக்கு 1765 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில் வடமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் 1600 பேர். இந்த தொழிற்பழகுநர்களுக்கு தேர்வு எதுவும் வைக்கப்படுவதில்லை. சான்றிதழ் சரி பார்த்தலுக்குப் பிறகு நடக்கும் நேர்முகத் தேர்வில், வடமாநிலத்தவர்கள் எளிதாக தேர்வு செய்யப்படுகிறார்கள். தொழிற்பழகுநர் பயிற்சி முடித்த சுமார் 15 ஆயிரம் பேர் அதை பதிவு செய்துவிட்டு 14 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் காத்திருக்கின்றனர். வேலை கிடைக்காததால் 28 பேர் உயிரையும் இழந்துள்ளனர்.
இந்த துரோகம் இன்று நேற்றல்ல, கடந்த கால் நூண்ணாண்டாகவே நடந்து வந்துள்ளது. 2014 நவம்பரில் தெற்கு இரயில்வே குரூப்-டி பணியாளர் தேர்வு நடத்தியது. இதற்காக தமிழ் நாளிதழில் வெளியிடப்பட்ட அறிவிப்பில் வேலை வாய்ப்புக்கு விண்ணப்பிக்கும்போது இணைக்கும் சான்றிதழ் நகல்களுக்கு அரசு அதிகாரிகளின் சான்றொப்பம் பெற வேண்டியதில்லை எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், ஆங்கில நாளிதழ் விளம்பரங்களில் வெளியிடும்போது அத்தாட்சி பெற்ற சான்றிதழை இணைக்கவேண்டும் என்று குறிப்பிட்டிருந்தது.
இதனால் சான்றிதழ்களில் அத்தாட்சி பெறாமல் விண்ணப்பித்திருந்த தமிழகத்தைச் சேர்ந்த இரண்டரை இலட்சம் பேரின் விண்ணப்பங்களை ரயில்வே நிராகரித்துவிட்டது. பீகார் போன்ற வட மாநிலங்களிலிருந்து விண்ணப்பித்திருந்தவர்களுக்கு தேர்வு நடத்தி டிராக்மேன், போர்ட் மேன், சபாய்வாலா, கலாசி போன்ற பணிகளுக்கு ஆயிரக்கணக்கானவர்களை பணியில் சேர்த்துவிட்டது. என்னவொரு சூழ்ச்சி? தென்னக இரயில்வே வட இந்திய ரயில்வேயாகவே இருக்கிறது.
முன்பெல்லாம் இந்தியன் ரயில்வேயில் அந்தந்த மாநிலத்தை சேர்ந்தவர்கள் பணி நியமனம் செய்யப்பட்டு வந்தனர். லாலு பிரசாத் யாதவ், நிதிஷ்குமார் ரயில்வே துறை அமைச்சராக இருந்தபோது, ரயில்வே பணிக்கு ஆட்கள் தேர்வுசெய்ய ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே விளம்பரங்களை வெளியிட்டனர். இதனால் பீகார், ஜார்கண்ட், உத்திரபிரதேசம் பகுதியை சேர்ந்தவர்கள் அதிக அளவில் ரயில்வே பணிக்கு வரத்தொடங்கிவிட்டனர்.
இரண்டு வருடங்களுக்கு முன்பு தமிழக அஞ்சல் அலுவலகங்களுக்கு ஊழியர் தேர்வு நடத்தப்பட்டது. இதில் தமிழை ஒரு பாடமாக்கி அதற்கு 25 மதிப்பெண்கள் ஒதுக்கப்பட்டிருந்தது. இதில் தமிழை தாய்மொழியாகக் கொண்டவரே அதிகபட்சமாக 18 மதிப்பெண்கள் எடுத்திருந்த நிலையில், 23 மதிப்பெண்களை அரியானாவைச் சேர்ந்தவர் எடுத்தார். அவரை விசாரித்தால் அவருக்கு தமிழ் மாலும் நஹி.
அதே போன்று சமீபத்தில் தமிழக அஞ்சல் துறையில் காலியாக இருந்த 4,460 பணியிடங்களுக்கு விளம்பரம் செய்து விண்ணப்பங்களை சமர்ப்பிக்க கடைசி நாள் ஏப்ரல் 15 என நிர்ணயிக்கப்பட்டியிருந்தது. இதற்கான விளம்பரம் வட இந்தியாவில் மார்ச் 15ஆம் தேதியே வெளியிடப்பட்டது. தமிழகத்திலோ 15 நாட்களுக்கு முன்பே விளம்பரம் செய்யப்பட்டது. ஆன்லைனில் தமிழர்கள் விண்ணப்பித்தபோது சர்வர் வேலை செய்யவில்லை. அதற்குமுன்பே வட இந்தியர்கள் அனைவரும் விண்ணப்பித்துவிட்டனர்.


சென்னை பெட்ரோலிய நிறுவனத்தில் வேதியியல் பொறியாளர் பணிக்கான நேர்காணலுக்கு ஒரு பணிக்கு மூவர் வீதம் 66 பேர் அழைக்கப்பட்டனர். அதில் ஒருவர் கூட தமிழகத்தைச் சேர்ந்தவர் அல்லர்.
இந்த பெட்ரோலிய நிறுவனத்தில் 2003க்குப் பிறகு வட இந்தியர் படிப்படியாக உள்ளே திணிக்கப்பட்டனர். இப்போது வட இந்தியர்கள் மட்டுமே அதிகாரிகளாக நியமிக்கப்படுகின்றனர். அதற்கு ஏதுவாக நேரடியாக ஆட்களைத் தேர்வு செய்ததை மாற்றி, போட்டித் தேர்வுகளை நடத்தும் பொறுப்பை தனியார் நிறுவனத்திடம் ஒப்படைத்துள்ளனர். போட்டித் தேர்வுகளில் முறைகேடு செய்து வட இந்தியர்களைஅதிகாரிகளாக நியமிக்கப்படுகின்றனர். இப்போது தொழில் பழகுனர், அலுவலக உதவியாளர்கள் உள்ளிட்ட பணிகளிலும் வட இந்தியர்கள் நுழைக்கப்படுகின்றனர்.
தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் கிளர்க் மற்றும் அதிகாரி பணியிடங்களில் சேருவதற்கு ஐ.பி.பி.எஸ் நடத்தும் தேர்வில் வெற்றி பெறவேண்டும். ஆனால், பாரத ஸ்டேட் வங்கி மட்டும் தன்னிச்சையாகவே கிளர்க் உள்ளிட்ட சிறப்பு அதிகாரிகளைத் தேர்வு செய்ய போட்டித் தேர்வு நடத்துகிறது. 2018ல் ஜூனியர் அசோசியேட் பொறுப்புக்கு 17,400 காலி பணியிடங்களை நிரப்பியது. இதில், தமிழ்நாட்டுக்கு மட்டும் 1,420 காலிப் பணியிடங்கள் ஒதுக்கப்பட்டன. இதிலும் வட இந்தியா மற்றும் கேரளாவைச் சேர்ந்தவர்களே தேர்வு செய்யப்பட்டனர்.
சென்னையில் இயங்கி வரும் வருமானவரித் துறை அலுவலகத்தில் 100 சதவிகித வட இந்தியர்கள் வேலை செய்வதாக அந்த அலுவலகத்திலேயே புத்தகம் வெளியிடப்பட்டிருக்கிறார்கள்.
பொதுத்துறையில்தான் இபப்டி என்றால், சுமார் 2 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் வேலை செய்யும் தென்னாசியாவிலேயே பெரிய தொழிற்பேட்டையான அம்பத்தூர் தொழிற்பேட்டையில் பணியாற்றுவோரில் 70 சதவிகிதத்தினர் வெளி மாநிலத்தவர்கள். சென்னையில் கட்டுமானப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு இருக்கும் தொழிலாளர்களில் 80 சதவிகிதத்தினர் வட மாநிலத்தவர்கள். தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றுவோரில் 40 சதவிகிதத்தினர் வெளிமாநிலத்தவர்கள். தமிழகத்தில் உள்ள அனைத்து தனியார் நிறுவனங்கள், டோல்கேட், சிப்காட்களில் வட இந்தியர்கள் ஆதிக்கம் அதிகரித்துவிட்டது.
ஏற்கனவே தமிழகத்தின் நகை அடகுத்தொழில், மின்சாதனப் பொருள், ஜவுளி விற்பனையில் 90{7a0882499a9dac11d1a5e618ecfeec8f2b279bdf1fc3589101913219fc8b42ec} மார்வாரிகள் உள்ளனர். வணிகத்துக்காக வட இந்தியர்கள் இங்கு குடும்பங்களுடன் வந்து தங்கிவிடுகின்றனர். திருப்பூர் ஆயத்த ஆடை ஆலைகளுக்கு கடந்த 20 ஆண்டுகளாக வந்த பீகார், உத்தர பிரதேசம், மணிப்பூர், ஒடிசா, அஸ்ஸாம் மாநிலத்தவர்கள் குடும்ப அட்டை, ஆதார் அட்டை வாங்கி அங்கேயே தங்கிவிட்டனர். இவர்கள் வாக்கு எண்ணிக்கை மட்டும் இலட்சத்தை தாண்டும்.
ஈரோட்டில் பெருந்துறை, சிப்காட் உள்ளிட்ட இடங்களுக்கு விசைத்தறி, சாயப்பட்டறை, தோல் தொழிலுக்கு வந்த வடவர்களில் சுமார் ஐம்பதாயிரம் வாக்காளர்களாக வளர்ந்து நிற்கின்றனர்.
ஒசூரில் 30,000 ஒப்பந்த தொழிலாளர்கள் வேலை பார்க்கின்றனர். சிவகாசி, ராஜபாளையம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பட்டாசுத் தொழிற்சாலைகளிலும் வட மாநிலத்தவர்கள் பெருகிவிட்டனர். சென்னையில் சவுகார்பேட்டை, வேப்பேரி ஆகியவை வட இந்தியர்கள் ஆதிக்கப் பகுதிகளாகவே ஆகிவிட்டன. குக்கிராமங்களில் கூட வட இந்தியர்கள் குடியேற்றம் நிகழ்ந்துள்ளது.
2011ல் தென்னிந்தியாவில் 58.2 லட்சமாக இருந்த வட இந்தியர் எண்ணிக்கை 10 ஆண்டுகளில் 77.5 லட்சமாக உயர்ந்துள்ளது மக்கள் தொகை கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.
கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் தமிழகத்தில் ஒரு கோடியே நாற்பது லட்சம் வட இந்தியர்கள் குடியேறியுள்ளதாக அதிர்ச்சி தகவல் சொல்கிறது. இதில் 80 லட்சத்துக்கும் மேல் தமிழக வாக்காளர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்பது கூடுதல் அதிர்ச்சி தகவல்.
தினமும் சென்னைக்கு ஒவ்வோர் நாளும் சுமார் 300 முதல் 400 வரையிலான வடஇந்தியர்கள் வருவதாக ஒரு புள்ளி விவரம்தெரிவிக்கின்றது.
நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு கடந்த 52 மாத காலத்தில், தமிழ்நாட்டில் உள்ள என்.எல்.சி. இந்தியா, பாரத் மிகுமின் நிறுவனம், வங்கிகள், வருமானவரித்துறை, சுங்க இலாகா, இரயில்வே துறை உள்ளிட்ட அனைத்துப் பொதுத்துறை நிறுவனங்களிலும் வடமாநிலத்தைச் சேர்ந்தவர்களையே 90 விழுக்காடு பணியில் அமர்த்தி இருக்கிறது.
மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களின் வேலை வாய்ப்பில் அந்தந்த மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று குஜராத், மத்தியப்பிரதேசம், கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்கள் தனிச் சட்டமே இயற்றி உள்ளன.
தமிழகத்தில் சுமார் 80 இலட்சம் படித்த இளைஞர்கள் வேலைவாய்ப்பு இன்றி தவிக்கும் நிலையில், வெளி மாநிலங்களிலிருந்து பணியாளர்களைக் கொண்டுவந்து மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் திணிப்பது சமூக சமத்துவத்துக்கு ஏற்றதல்ல.
சில வருடங்களுக்கு முன்பு மகாராஷ்டிர அரசு அமுல்படுத்திய சட்டப்படி அம்மாநிலங்களில் தொடங்கப்படும் தொழிற்சாலைகள் மற்றும் தொழில் நிறுவனங்களில் குறைந்தபட்சம் 80 சதவிகித மகாராஷ்டிர மக்களுக்கு முன்னுரிமை கொடுக்கவேண்டும். கர்நாடக அரசு மாநில குரூப் சி மற்றும் குரூப் டி போன்ற அனைத்துப் பதவிகளும் கன்னடர்களுக்கே வழங்கப்படும் வகையில் சட்டம் இயற்றியுள்ளது. இதற்காக கர்நாடக தொழிற்சாலை நிலையாணை விதிகளில் திருத்தங்கள் செய்யப்பட்டு 1986ல் இயற்றப்பட்ட சரோஜினி மகிஷி சட்டத்தினை ஆதரிக்கும் விதமாக சில மாறுதல்களை முன்னிறுத்தியுள்ளது.
1968ல் மகாராஷ்டிரா, 1986ல் கர்நாடகா, 1995ல் குஜராத், 1999ல் மேற்குவங்கம், 2003ல் இமாச்சல் பிரதேசம், 2007ல் உத்தராகண்ட், 2008ல் ஒடிசா, 2010ல் மத்திய பிரதேசம், 2014ல்கேரளம், 2015ல் சத்தீஸ்கர், இறுதியாக 2017ல் ஆந்திரா, தெலுங்கானா ,கோவா, ஜார்கண்ட் போன்ற மாநிலங்களில் மண்ணின் மைந்தர்களுக்கே அரசு வேலைகளில் முக்கியத்துவம் என அரசு பணியாளர் தேர்வாணைய சட்டங்களில் திருத்தம் கொண்டு வந்து.
ஆனால், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத் தேர்வுகளில் பிற மாநிலத்தவரும் பங்கேற்கலாம். பணிக்கு தேர்வு பெற்ற 2 ஆண்டுகளில் தமிழ் மொழித்தேர்வில் தேர்ச்சி பெற்றால் போதும் என்று சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.
இங்கு மொழிபெயர்ப்பாளர்கள் இல்லாத காரணத்தினால் ஆங்கிலத்திலும் இந்தியிலுமே குரூப்-1 குரூப்-2 தேர்வுகள் நடைபெற்றதும், அதன் பின்னர் எதிர்க்கட்சிகளால் கடுமையாக விமர்சிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
‘தென்னக ரயில்வேயில் 1765 இடங்களில் 1600 வட இந்தியர்கள் தேர்வு செய்தது, அஞ்சல் துறைக்கு தமிழில் நடைபெற்ற தேர்வில் அரியானா, பீகார் மாநிலத்தவர் அதிக மதிப்பெண் எடுத்தது போன்ற விவகாரங்களை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், கடும் விமர்சனம் செய்தது.
இப்படி பிற மாநிலத்தவர் இங்கு வேலையை அபகரித்துக்கொண்டிருக்க, மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் உள்ளிட்ட அதிகாரிகளை தரும் குடிமைப்பணி தேர்வில் கடந்த 2010ம் ஆண்டில் 12 விழுக்காடாக இருந்த தமிழ்நாட்டு இளைஞர்களின் தேர்ச்சி, இப்போது 5 விழுக்காடாக குறைந்துள்ளதிலும் சதி இருக்கிறது.
அந்தந்த மாநிலங்களின் வளர்ச்சி, வேலைவாய்ப்பு, பண்பாடு, கலாச்சாரத்தை வளர்க்கவே மொழி வழி மாநிலங்கள் பிரிக்கப்பட்டன. இப்போது நடக்கும் இந்த அநீதி, 1956ல் இயற்றப்பட்ட மொழி வழி மாநிலங்கள் சட்டத்திற்கு எதிரானது என்பதில் சந்தேகமில்லை.
தமிழ்நாடு தமிழருக்கே, தமிழ்நாட்டு ஆட்சி தமிழருக்கே என்று முழுங்கிய மாநிலத்தில், தமிழ்நாட்டு வேலையை தமிழருக்கு கொடுங்கள்’ என்று பிசசை கேட்கும் நிலை உருவாகியுள்ளது.
ஈழம் என்னும் தமிழர் தேசத்தில் எங்கிருந்தோ வந்தவர்களுக்கு இடம்கொடுக்க, சிங்கள இனம் தோன்றியது. சிறுபான்மையாக இருந்த சிங்களவர்கள் தமிழர்களை விட அதிக குழந்தைகள் பெற்று பெரும்பான்மை ஆனார்கள். 1700களில்தான் சிங்களவர் தமிழர்களுக்கு சம எண்ணிக்கைக்கு வந்தனர். தொடர்ந்து தமிழர்களை அழித்து பெரும்பான்மை ஆகினர்.

அந்தமானில் தமிழர்கள் பெரும்பான்மையாக இருந்தபோது வங்கதேச விடுதலை போரில் அகதிகளாக வந்தவர்களுக்கு இடம் கொடுத்தனர். நாளடைவில் வங்காளிகள் தமிழரை விட பெரும்பான்மை ஆயினர். இப்படி வந்தாரை வாழவைத்து நொந்த தமிழ் இனம் இனியாவது விழிக்கவேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here