ஒருமுறை அஸ்தினாபுரத்துக்கு வந்திருந்தார் கிருஷ்ண பரமாத்மா. காலை நேர நியமங்களை முடித்துக்கொண்டு பாண்டவர்களைப் பார்க்கச் சென்றார். வாயிலில் இருந்தே வரவேற்ற யுதிஷ்டிரரின் (தர்மர்) முகம் வாட்டத்தோடு இருப்பதைக் குறிப்பால் உணர்ந்துகொண்டார். உள்ளே வந்து அமர்ந்தவர் தர்மரைப் பார்த்தார். அவரோ தலைகுனிந்து அமர்ந்திருந்தார்.
“மைத்துனா… ஏன் என்னவோபோல் இருக்கிறாய்? உடல் உபாதை ஏதும் இல்லையே?’’
“இல்லை கிருஷ்ணா… இரவில் சரியாகத் தூங்கவில்லை.’’
“உறக்கம் வரவில்லை என்றால் அது நிம்மதியின்மையைக் குறிக்கிறது. உன் மனம் அமைதியில்லாமல் இருக்கிறதா என்ன..? அப்படி அசம்பாவிதச் சம்பவம் எதுவும் அஸ்தினாபுரத்தில் தற்போது நிகழ்ந்ததாகத் தெரியவில்லையே..!’’
“அசம்பாவிதமெல்லாம் இல்லை கண்ணா… ஒரு விஷயத்தைப் பற்றி யோசித்தேன். அது என்னை தூக்கம் இல்லாமல் அடித்துவிட்டது.’’
“தர்மா… மனம் வேதனைப்படும் எதுவாக இருந்தாலும் யாரிடமாவது அதை வெளிப்படுத்திவிட வேண்டும். இல்லையென்றால், அது உள்ளத்தை அரித்து அரித்து பெரும் துன்பத்தை வரவழைத்துவிடும். என்னிடம் சொல்… எதுவாக இருந்தாலும் சொல்! என்னால் தீர்க்க முடிகிறதா என யோசிக்கிறேன்…’’
தர்மர் சற்றுத் தயங்கிவிட்டு ஒரு கேள்வி கேட்டார்… “கிருஷ்ணா… பாண்டவர்களாகிய நாங்கள் நல்லவர்கள்தானே..?’’
“அதிலென்ன சந்தேகம்? அதனால்தான் நான் உங்களோடு இருக்கிறேன்.’’
“எங்களின் அருங்குணங்கள்..?’’
“எது வந்தாலும் நீதியின் பக்கம் நிற்கும் துணிவு, நல்லவர்க்கு உதவும் பாங்கு, எளியோர்க்கு இரங்கல்… என உங்கள் ஐவரின் நற்குணங்களை அடுக்கிக்கொண்டே போகலாமே! அத்தனையும் ஒருங்கே பெற்றவனாக நீ இருக்கும்போது, உன் தலைமையில் உன் தம்பிமார்களும் அப்படித்தானே இருப்பார்கள்?’’
“சரி… தான, தர்மத்தில்?’’
“அதையும் நீங்கள் செய்துகொண்டுதானே இருக்கிறீர்கள்..?’’
“அப்படியானால் ‘கொடைக்குச் சிறந்தவன் கர்ணன்’ என்று உலகமே பாராட்டுகிறதே… நாங்கள் அவனைவிட எவ்விதத்தில் குறைந்துபோனோம்? இந்த எண்ணம்தான் என்னை இரவெல்லாம் உறங்கவிடாமல் அடித்தது.”
கிருஷ்ண பரமாத்மாவின் அதரங்களில் மென்நகை நெளிந்தது. தர்மரின் முகத்தையே உற்றுப் பார்த்தார்.
“சரி வா என்னோடு… உன் தம்பிகளையும் அழைத்துக்கொள். உன் சந்தேகத்துக்கு விடை கிடைக்கிறதா எனப் பார்ப்போம்…’’
கிருஷ்ணர் முன்னே செல்ல, பாண்டவர்கள் பின் தொடர்ந்தார்கள். அஸ்தினாபுரத்தின் எல்லையைத் தாண்டி ஓர் இடத்தில் எல்லோரையும் நிற்கச் சொன்னார் கிருஷ்ணர். ஆயர்குலத் தோன்றல் ஸ்ரீகிருஷ்ணர் தன் வலக் கரத்தை உயர்த்தினார். இரு சிறு குன்றுகள் தோன்றின. ஒன்று, தங்கக் குன்று. மற்றொன்று, வெள்ளிக் குன்று.
“ஒரு சின்ன பரீக்ஷை தர்மா! நீயும் உன் தம்பிகளும் சேர்ந்து இந்த இரு குன்றுகளையும் தானமாகக் கொடுக்க வேண்டும். யாருக்கு வேணுமானாலும் கொடுக்கலாம். ஆனால், ஒரு நிபந்தனை. மாலைக்குள் கொடுத்துவிட வேண்டும்… முடியுமா? அது நடந்தால், கர்ணனைவிட நீங்கள் சிறந்தவர்கள் என நான் ஒப்புக்கொள்கிறேன்… உலகுக்கே எடுத்துச் சொல்கிறேன்.’’
தர்மர் தன் தம்பிமார்களைப் பார்த்தார். வலுவிற் சிறந்த பீமன், வில்லிற் சிறந்த அர்ஜுனன், நகுலன், சாஸ்திரத்தில் சிறந்த சகாதேவன் அனைவரும் களமிறங்கினார்கள். அந்தப் பக்கம் வருவோர் போவோரையெல்லாம் அழைத்து, தங்கக் குன்றையும் வெள்ளிக் குன்றையும் வெட்டி வெட்டிக் கொடுத்தார்கள். ஆனாலும், மாலை நெருங்கிக்கொண்டிருந்தது. ஆனாலும், அவர்கள் கொடுத்ததில், பாதி குன்றுகள் அப்படியே தீராமல் இருந்தன.
தர்மர், யோசனையோடு கிருஷ்ணர் முகத்தையே பார்த்தார்.
“இன்னுமா தீரவில்லை?’’ என்ற பகவான், “சரி… நான் ஒரு யோசனை சொல்கிறேன். யாரையாவது அனுப்பி, கர்ணனை அழைத்துவரச் சொல்!’’
கர்ணனை அழைக்க ஆட்கள் பறந்தார்கள். கர்ணனும் வந்து சேர்ந்தான்.
“கர்ணா..! இவை இரண்டும் அபூர்வக் குன்றுகள். இன்று மாலைக்குள் இவற்றைக் கொடுத்துவிட வேண்டும். மாலையாகிவிட்டால், இவற்றின் மகிமை போய்விடும்… உன்னால் முடியுமா?’’
கர்ணன் ஸ்ரீகிருஷ்ணரை வணங்கி அந்தப் பொறுப்பை ஏற்றுக்கொண்டான். சற்று தூரத்தில் ஒரு வயோதிக விவசாயி வருவதைப் பார்த்தான். ஓடிப் போய் அவர் கையைப் பிடித்து இழுத்து வந்தான்.
“ஐயா… நான் மகிழ்ச்சியோடு கொடுப்பதை தாங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். ஏற்பீர்களா?”
கர்ண மகாராஜா கேட்கிறாரே… அது சாதாரணமாகவா இருக்கும்? விவசாயி சரியெனத் தலையசைத்தார்.
“இதோ… இந்த தங்கக் குன்று, வெள்ளிக் குன்று இரண்டையும் உங்களுக்குக் கொடுக்கிறேன்…” விவசாயி மலைப்போடு தன் பரிசுப் பொருளைப் பார்த்தார்.
‘கர்ணன் ஏன் சிறந்தவன் என்று இப்போது புரிகிறதா?’ என்று சொல்லாமல் தன் பார்வையாலேயே பார்த்தார் கிருஷ்ணர். தர்மர், தன் தலையைத் திருப்பிக்கொண்டார். மனமுவந்து கொடுப்பதில், வாரி வழங்குவதில் கர்ணனுக்கு இணை யாரும் இல்லை. தர்மமோ, தானமோ இரண்டையும் மனமுவந்து செய்யவேண்டும் என்பதை ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா உணர்த்திய சம்பவம் இது.














