தாமிரபரணி வெள்ளத்துக்கு காரணமான சூளைகளை அகற்றாவிட்டால் போராட்டம்: பாதுகாப்பு இயக்கம் அறிக்கை

0
1721

தாமிரபரணி வெள்ளத்துக்கு காரணமான செங்கல் சூளைகள் மணல் கொள்ளைக்கான கரை உடைப்புகளை ஆய்வு செய்து கண்டறிந்து உடனடியாக அகற்ற வேண்டும். இல்லையேல் கடுமையான போராட்டத்தை முன்னெடுப்போம் என தாமிரபரணி பாதுகாப்பு இயக்கம் எச்சரித்துள்ளது.

இது குறித்து தாமிரபரணி பாதுகாப்பு இயக்கப் பொதுச் செயலாளர் இதழாளர் ஐகோ வெளியிட்டுள்ள அறிக்கை :

மிகச் சமீபத்தில் மக்கள் வாழ்க்கையை சூறையாடிய தாமிரபரணி பெரு வெள்ள பாதிப்புக்கு உண்மையிலேயே முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்த தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி, காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் உள்ளிட்டோர் நடவடிக்கைகளை பாராட்டுகிறோம். ஆனாலும் கவலைக்குரிய முக்கிய பிரச்சனைகளுக்கு தீர்வு காண அவர்கள் முன்பு கோரிக்கை வைக்கிறோம்.

நோய் நாடி, நோய்முதல் நாடி என்ற வள்ளுவனார் வாக்குக்கு ஏற்ப வெள்ளத்துக்கு காரணமான பிரச்சனையை தீர்த்து வைக்க வேண்டுகிறோம்.

தமிழ்நாட்டுக்கு சொந்தமான ஒரே நதி, மூன்று மாவட்டங்களின் நீர் ஆதாரமும், ஏழு மாவட்டங்களின் குடிநீர் ஆதாரமுமான தாமரபரணி ஆக்கிரமிப்பு காரணமாக அழிந்து வருவதை பலமுறை அரசுக்கு எடுத்துரைத்து வருகிறோம். ஆனாலும் ஆக்கிரமிப்பை அகற்றாமல் அரசுத்துறைகள் அசட்டை செய்து வருகின்றன.

குறிப்பாக, தாமிரபரணி கரைகளிலும் ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ள சுமார் நூறு செங்கல் சூளைகள் மணல் கொள்ளைக்கும் மரங்களின் மரணத்துக்கும் காரணமாகிவிட்டன. தூத்துக்குடி மாவட்டத்தில் நிகழ்ந்த பெருவெள்ளப் பாதிப்புக்கு செங்கல் சூளை ஆக்கிரமிப்பு முக்கிய காரணமாக உள்ளது.

வல்லநாடு தாண்டி, முத்தாலங்குறிச்சி, ஸ்ரீவைகுண்டம், ஏரல், முக்காணி, ஆத்தூர் வரை அமைக்கப்பட்டுள்ள சட்ட விரோத செங்கல் சூளைகளுக்காக ஆற்றின் கரைகளை உடைத்து கனரக லாரிகளை இறக்கி சவட்டு மணல் எடுத்து வருகின்றனர்.

இந்தக் குறுமணல் கொள்ளையர்கள், அவ்வப்போபோது அந்த கரை உடைப்பு சாலைகளை பயன்படுத்தி ஆற்று மணலையும் திருடி வருகின்றனர். ஆற்றங்கரைகளில் நின்ற நூற்றாண்டு கண்ட தேக்கு, மருது மரங்களையும் வெட்டி சூளைகளுக்கு விறகாக்குகின்றனர்.

எனவே, உடனடியாக மாவட்ட நிர்வாகம் அனைத்து சூளைகளையும் பார்வையிட்டு, உடனடியாக அவற்றை அப்புறப்படுத்த வேண்டும். சூளை உரிமையாளர்களுக்கு அதனதன் அருகில் உள்ள புறம்போக்கு நிலத்தை பட்டா போட்டு கொடுத்த வருவாய் துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முத்தாலங்குறிச்சி, உமரிக்காடு கஸ்பா கிராமம் அப்பன் கோவில் வரதராஜபுரம் பரங்குசநல்லூர் தெற்கு தோழப்பன் பண்ணை, கலியாவூர், முக்காணி, ஆத்தூர் ஆகிய பகுதியில் ஆற்றங்கரை ஓரங்களில் உள்ள செங்கல் சூளைகளை இனிமேல் நடத்தாமல் தடுத்து நிறுத்த வேண்டும்.

ஆக்கிரமிப்பு செங்கல் சூளை உரிமையாளர்களிடமும், அதற்கு உடந்தையாக இருந்த வருவாய் அதிகாரிகளிடமும் தண்டம் வசூலித்து, கோடிக்கணக்கில் உடைமைகளையும் விளை பயிரையும், கால்நடையையும் இழந்த மக்களுக்கு இழப்பீடாக வழங்க வேண்டும்.

தவறினால், 2014 ல் நெல்லையில் செய்தது போல, மக்களை திரட்டி நாங்களே செங்கல் சூளைகளை அகற்றுவோம்.

இவ்வாறு அவர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here