போலி சான்றிதழ் கொடுத்து 20 ஆண்டு வேலை – ஆசிரியை பணிநீக்கம்

0
711

:

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பகுதியைச் சேர்ந்த ராஜாத்தி(47).கோவில்பட்டி அருகே நாளாட்டின் புதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். பணியில் சேர்ந்து 20 ஆண்டுகள் நிறைவடைந்ததை தொடர்ந்து சிறப்பு நிலை ஆசிரியராக பதவி உயர்வுக்காக விண்ணப்பம் செய்தார்.

இவரது சான்றிதழ்களை தேர்வுகள் துறை உதவி இயக்குநர் சரி பார்த்தனர்.அப்போது ஆசிரியர் பட்டய பயிற்சி சான்றிதழில் ஆங்கில பாடத்தில் 37 மதிப்பெண் பெற்றதாக இருந்தது. ஆனால் அவர் சமர்ப்பித்திருந்த சான்றிதழில் மதிப்பெண் 77 என இருந்தது.

இதுகுறித்து கோவில்பட்டி கல்வி மாவட்ட அலுவலர் சின்னராசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, சான்றிதழ்களில் உள்ள குளறுபடி குறித்து உண்மைத்தன்மை அறிய ஆய்வு குழு அமைக்க உத்தரவிடப்பட்டது. அக்குழு ஆசிரியை ராஜாத்தியின் சான்றிதழ்களை ஆய்வு செய்தபோது அது போலியானது என கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து ஆசிரியை ராஜாத்தி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

இதற்கிடையே கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் கல்வி மாவட்ட அலுவலர் அளித்த புகாரின் பேரில், ராஜாத்தி மீது போலி சான்றிதழ் கொடுத்து அரசு பணியில் சேர்ந்து மோசடி செய்ததாக வழக்கு பதிவு செய்துள்ளனர்.

ராஜாத்தி கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி வட்டத்தில் உள்ள ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் 1994 – 96ல் ஆசிரியர் பட்டய பயிற்சியை முடித்துள்ளார். கடந்த 2002-ம் ஆண்டு விருதுநகர் மாவட்ட தொடக்க கல்வி அலுவலகத்தில் இடைநிலை ஆசிரியராக பணி நியமனம் பெற்று அப்பகுதியில் உள்ள காரியாபட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் பணியில் சேர்ந்தார். பின்னர் தூத்துக்குடி மாவட்டம் புதூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளிக்கு பணியிட மாறுதல் பெற்று பணியாற்றி வந்தார். கடந்த மார்ச் மாதம் நடந்த ஆசிரியர் பணியிட மாறுதல் கலந்தாய்வில் கலந்துகொண்டு, நாலாட்டின்புதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு மாறுதல் பெற்றுள்ளார் .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here