நடிகர் விஜய்யின் தவெக மாநாடு கட்சியின் கொள்கை பாடலுடன் தொடங்கியது. நடிகர் விஜய் 100 அடி கொடிக்கம்பத்தில் கொடியேற்றி வைத்தார்.
பல்வேறு தடைகளையும் போலீசாரின் நிபந்தனைகளையும் கடந்து, இரண்டு முறை தேதி தள்ளி வைக்கப்பட்டு, இன்று மாலை 3 12 மணியளவில் மாநாடு தொடங்கியது.
காலை முதலே ஆயிரக்கணக்கில் தொண்டர்கள் விக்கிரவாண்டி வி சாலையை நோக்கி வந்து கொண்டிருந்தனர். திருச்சியிலிருந்து வந்த வேன் கவிழ்ந்து இரு தொண்டர்கள் பலியானதால் 50 வேன்களில் வந்த திருச்சி தொண்டர்கள் திரும்பி சென்றனர். சென்னையில் இருந்து பைக்கில் வந்த தொண்டர் ஒருவர் விபத்தில் சிக்கி பலியானார். எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து விழுப்புரம் நிறுத்தத்திற்கு பதிலாக விக்கிரவாண்டியில் இறங்க முயன்ற ஒரு தொண்டரும் பலியானார். இருவர் காயம் அடைந்தனர்.
காலை முதலே காத்திருந்ததால் தாகத்தாலும் வெயிலாலும் சில தொண்டர்கள் மயங்கி விழுந்தனர். சிறுமி ஒருத்தியும் மயக்கம் அடைந்தாள். அவர்களுக்கு உடனடியாக முதலுதவி அளிக்கப்பட்டது.
மாநாட்டில் விஜய்யின் தந்தை சந்திரசேகர், தாய் ஷோபா ஆகியோரும் பங்கேற்றனர். பொதுச் செயலாளரான ஆனந்த், மூன்று மணி முதலை கூட்டத்தை ஒழுங்கு படுத்தினார்.
ரெண்டு மணி வரை போலீசார் குறைவாகவே இருந்தனர். பின்னர் 2000 போலீசார் புதிதாக காவலுக்கு வந்தனர். சுமார் இரண்டு லட்சம் தொண்டர்கள் கூடினர்.
ஆரவாரத்துடன் ரேம்ப் வாக் வந்தார் விஜய். பின்னர் தமிழ்நாட்டு வேந்தர்கள், தமிழ்நாட்டைச் சேர்ந்த,விடுதலைப் போராட்ட வீரர்கள், மொழிப்போர் தியாகிகள் திருவுருவங்களுக்கு மலர் அஞ்சலி செலுத்தினார்.
விஜய் உடன் பொதுச்செயலாளர் ஆனந்த், பொருளாளர், தலைமை நிலையம் ஆகியோர் சூழ, நூறு அடி கொடி மரத்தில் ரிமோட் பட்டனை அழுத்தி கொடியேற்றி வைத்தார்.
பின்னர் தொண்டர்கள் அனைவரும் எழுந்து கொடி வணக்கம் செலுத்தினர். அதையடுத்து தமிழ்த் தாய் வாழ்த்து பிழையின்றி பாடப்பட்டது.
கட்சியின் உறுதிமொழியை பொருளாளர் வெங்கடராமன் வாசிக்க அனைவரும் அதை பின்பற்றி பின் மொழிந்தனர் ‘பிறப்புக்கும் எல்லா உயிர்க்கும்’ என்று தொடங்கி, நாட்டின் விடுதலைக்காக போராடி உயர்நீத்த தமிழ்நாட்டு தியாகிகளின் தியாகத்தை போற்றியும், அன்னை தமிழ் மொழியை காக்க தொடர்ந்து உறுதியளித்தும், அரசியலமைச் சட்டத்தின் மீதும் நம்பிக்கை கொண்டு, அனைவரும் ஒற்றுமையாக இருந்து, மதச்சார்பின்மை, சமூக நீதி கொள்கையுடன் இந்திய இறையாண்மையையும் பாதுகாப்பதாக உறுதிமொழி ஏற்றனர்.
அடுத்து ஆனந்த் விஜயின் தாய் தந்தை உள்ளிட்ட அனைவரையும் வரவேற்று பேசியதும் ‘ வெற்றி, வெற்றி, வெற்றி வாகை வெற்றி, வெற்றி, வெற்றி என்ற கொள்கை பாடல்அறிமுகப்படுத்தப்பட்டது.
பாடலில் நடுவில் வந்த செக்யூலர் சோசியலிச ஐடியாலஜி தான் தவெகவின் கொள்கை என்பது உறுதிப்படுத்தப்பட்டது.