‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நல்ல சமூகக் கருத்துகள் உள்ள படங்களை அஜித் குமார் தேடி வருவதாகவும், அவரது அடுத்த படம், ‘ஆர்டிகள் 15’ என்கிற பாலிவுட் படத்தின் ரீமேக்காக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
ஆயுஷ்மன் குரானா நடிப்பில் அனுபவ சின்ஹா இயக்கத்தில் உருவான ‘ஆர்டிகள் 15,’ விமர்சனம், வசூல் என இரண்டு விதங்களிலும் பெரும் வரவேற்பைப் பெற்றது. மதம், இனம், சாதி, பாலினம், பிறப்பிடம் ஆகியவற்றின் அடிப்படையில் நடக்கும் பாகுபாட்டை ‘ஆர்டிகள் 15’ தடை செய்கிறது. ஒரு சிறிய கிராமத்தில் 3 பதின்பருவப் பெண்கள் காணாமல் போக அதன் போலீஸ் விசாரணை எப்படி நடக்கிறது என்பதை இந்த ‘ஆர்டிகள் 15’-ன் பின்புலத்தில் சொல்லும் கதை.
‘நேர்கொண்ட பார்வை’ படத்தைத் தயாரித்த போனிகபூர் தான் ‘ஆர்டிகள் 15’ படத்தின் ரீமேக் உரிமைகளையும் வாங்கியிருப்பதாகத் தெரிகிறது. அஜித் நடிப்பில் உருவாகும் அடுத்த படத்தையும் இவரே தயாரிப்பதால் ‘ஆர்டிகள் 15’ படத்திலும் அஜித் நடிக்கலாம் என்று செய்திகள் வந்துள்ளன. விரைவில் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வரும் என்று தெரிகிறது.
முன்னதாக, நடிகர் தனுஷ், ‘ஆர்டிகள் 15’ படத்தின் ரீமேக்கில் நடிக்க ஆர்வம் காட்டியிருந்தது நினைவுகூரத்தக்கது.