கருத்து கேட்பு என்னும் கழுத்தறுப்பு

0
1592

இந்திய சனநாயகத்தில் மிகப்பெரிய மோசடியாக கருத்து கேட்பு கூட்டம் என்னும் நடைமுறை உள்ளது.
நிலங்களை கையகப்படுத்துவது தொடர்பாக கடந்த 2015 செப்டம்பரில் தமிழக அரசு ஒரு புதிய சட்டத்தை கொண்டு வந்தது. இந்த சட்டமானது நிலத்தை எளிதாக கையகப்படுத்தி நெடுஞ்சாலைகள் மற்றும் தொழிற்சாலைகள் அமைக்க ஏதுவாக அமைந்திருந்ததால், மக்கள் கருத்தை கேட்காமலேயே நிறைவேற்றிவிட்டனர்.
இதை எதிர்த்து ராமநாதபுரத்தை சேர்ந்த கருணாநிதி உட்பட 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். கருத்து கேட்பு கூட்டம் நடத்தாமலேயே தமிழக அரசு நிலம் கையகப்படுத்தி வருவதாக மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. சட்டத்தை ரத்து செய்தால் சுமார் 80 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான உள்கட்டமைப்பு திட்டங்கள் பாதிக்கப்படும் என தமிழக அரசு சார்பில் வாதிக்கப்பட்டது.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசு கொண்டு வந்த நிலம் கையகப்படுத்துதல் தொடர்பான குறிப்பிட்ட சட்டப்பிரிவை ரத்து செய்து தீர்ப்பளித்தது.
இந்த வெற்றிகரமான தீர்ப்பு மூலம் ராமநாதபுரம் உப்பூரில் சுமார் 5,000 ஏக்கர் நிலம் கையகப்படுத்தும் ஆதிக்கம் தவிர்க்கப்பட்டுள்ளது. சேலம் எட்டுவழிச்சாலை திட்டத்துக்காக விவசாயிகளிடம் இருந்து பறிக்கப்பட்ட நிலங்கள் மீண்டும் விவசாயிகளிடமே ஒப்படைக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
கருத்துக்கேட்பு கூட்டம் என்ற வார்த்தை இப்போதெல்லாம் அடிக்கடி மக்கள் காதில் அடிபடுகிறது. காரணம், சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் தொழிற்சாலைகள், மக்கள் நலனை பாதிக்கும் திட்டங்கள் அதிகரித்து வருகின்றன. தொழிலக சட்டப்படி, மனித உரிமை, தகவல் உரிமை சட்டப்படி இப்படியான கருத்துக்கேட்பு கூட்டங்கள் நடத்துவது அவசியம் என்பதாலேயே வேறு வழியின்றி இவை நடத்தப்படுகின்றன.
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும் பட்ஜெட் தாக்கலுக்கு முன்பு அது தொடர்பாக பொது மக்கள் கருத்துக்களை கூறும்படி அறிவித்தார். ஆனால், பட்ஜெட் அறிவிப்புக்கு சிறிது கால அவகாசமே இருந்த நிலையில் அவ்வாறான அழைப்பு விடுத்ததால் எந்தப்பயனும் இல்லாது போயிற்று.
சிகரெட் அட்டையில் முக்கியமாக எழுதப்படவேண்டியது விழிப்புணர்வு வாசகம். காரணம், சிகரெட் நோய்கொடுக்கும் உயிர்குடிக்கும் நுகர்வுப்பொருள். ஆனால், அட்டையின் அடியில் கண்ணுக்கு புலப்படாத எழுத்தில் எச்சரிக்கை வாசகத்தை அச்சிட்டிருப்பர். அதுபோல்தான் மக்களின் கண்களுக்கு கருத்து கேட்பு கூட்டத்தை மறைத்து, தங்களின் சார்பாளர்களை மட்டும் அனுமதித்து கருத்துக்களை பதிந்துகொள்வதும் நடக்கிறது.
சீப்பை ஒளித்துவைத்தால் திருமணம் நிற்காது என்று மடையனுக்கும் தெரியும். ஒரு மாபெரும் ஜனநாயக நாட்டின் எதிர்கால மனித ஆற்றலை கூர்தீட்ட கொண்டுவரப்படுவது புதிய கல்விக்கொள்கை. அது தொடர்பான கருத்தை அறிவுசார் மையங்களிலும், வெகுஜன கூட்டங்களிலும், ஏன் கற்கும் மாணவர்களிடமும் கூட பெறவேண்டியது அவசியம்.
ஆனால், 30 ஆண்டுகளுக்குப் பிறகு கொண்டு வரப்படும், 484 பக்கம் கொண்ட அந்த கல்விக் கொள்கை வரைவு திட்டத்தை அரசியல் சாசனத்தால் அங்கீகரிக்கப்பட்ட பட்டியல் மொழிகளில் கூட வெளியிடாமல் ஆங்கிலத்தில் மட்டுமே வெளியிட்டிருக்கிறார்கள். அது தொடர்பாக கருத்து தெரிவிப்பதற்கான கால அவகாசமும் குறைவு என்ற நிலையில், வெளித்தெரியாதவாறு கூட்டங்களை நடத்தி கருத்து பதிகின்றனர்.
ஸ்டெர்லைட், அணு உலை, எட்டு வழிச்சாலை போன்றவை சுற்றுச்சூழலுக்கு பாதகமானவை என்று அந்தப் பகுதியினருக்கு மட்டுமல்ல, தமிழகம் முழுவதும் உள்ள அனைவருக்கும் தெரியும். ஆனால், அதற்காக ஜோடனையாக ஒரு கருத்து கேட்பு கூட்டத்தை நடத்தி, எதிர்ப்புகளை மீறி திட்டங்களை செயல்படுத்த முனைகிறார்கள்.
கூடங்குளம் அணு உலை மைய வளாகத்தில் அணுக் கழிவுகளை சேமிப்பது தொடர்பான கருத்து கேட்பு கூட்டம் ராதாபுரத்தில் ஜூலை 10ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் அதற்கான அறிவிப்பு இணையதளத்தில் மட்டுமே வெளியிடப்பட்டது. ஆனாலும், சமூக ஆர்வலர்கள் மூலம் பொதுமக்களிடம் பரவியதும் அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். பெருங்கூட்டமாகிவிடும் என்றதும் கருத்து கேட்பை ஒத்திவைத்துவிட்டனர்.
சில திட்டங்களுக்கு இப்படி கருத்து கேட்பு கூட்டத்தை தள்ளிவைக்காமல் ஒப்புக்கு சிலரை அழைத்து கையொப்பம் பெற்று திட்டத்தை கொண்டுவந்துவிடுவர். அரசே செய்யும் இந்த மோசடிகளை யார் கேட்க முடியும்?
ஆபத்தான அணுக்கழிவுகள் வேறு இடத்திற்கு கொண்டு செல்லப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் இப்போது நெருக்கடியான அணுமின் நிலைய வளாகத்தில் அதை புதைக்கும் அபாய முடிவு அரசே எடுப்பது நியாயமா என்று கேட்கக்கூட முடியாத நிலை.
சேலம் _ சென்னை 8 வழிச்சாலை அமைப்பதற்காக நடந்த கருத்து கேட்பு கூட்டத்தில் கண்ணீரும் கம்பலையுமாக வந்த விவசாயிகள், நிலம் கொடுக்க முடியாது என்று எழுதிக் கொடுத்துவிட்டுச் சென்றார்கள். ஆனாலும், அதற்கு உரிய மதிப்பளிக்கப்படவில்லை. தேர்தல் வெற்றியை கருத்தில்கொண்டு முதல்வர் எடப்பாடி சாலை அமைக்கப்படாது என அறிவித்தார். ஆனால், தேர்தல் முடிந்ததும் பழையபடி வேதாளம் முருங்கை ஏறிய கதையானது.
கடற்கரை மண்டல வரைவு, கடலோர மண்டல மேலாண்மை திட்டம் போன்றவை கடலுக்கு மாசு ஏற்படுத்தும் துறைமுகங்கள், தொழில் நிறுவனங்கள் அமைக்கவும், கடலோர மீனவ மக்களின் வாழ்வாதாரத்தை சிதைக்கவும் கொண்டுவரப்பட்டவை. அவை குறித்து கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட்ட இடங்களில் எல்லாம் கூட்டத்தை பொதுமக்கள் புறக்கணித்தனர். ஆனால், மேலாண்மை திட்டத்தை செயல்படுத்தும் மும்முரத்தில் மத்திய அரசு உள்ளது.
கருத்துக்கேட்பு கண்துடைப்பு நாடகங்கள் என்பது ஜனநாயக சம்பிரதாயங்களாகிவிட்டன. கருத்து கேட்காமலேயே திட்டஙக்ளையும் சட்டங்களையும் உருவாக்கி மக்களை பாதிப்புக்குள்ளாக்கவும் தயங்குவதில்லை.
அரசு என்பது சட்டத்தால் மட்டுமல்ல, தர்மத்தாலும் நிறுவப்பட்ட அமைப்பு. மக்கள் வாழ்வாதாரத்துக்காக செயல்படவேண்டிய அளவு அவர்களுக்கான நீதிக்காகவும் இயங்கவேண்டியது அதன் கடமை. அவ்வாறிருக்க, முன்னொரு வாக்கும், பின்னொரு வாக்கும் அளிக்கப்பட்டால் பாதிக்கப்படுவது மக்கள் அல்லவா?
காந்தியின் ஆடை முறையும், காமராஜரின் சத்துணவு திட்டமும் சாமான்ய ஏழை குடியானவர்களின் கருத்தை அல்ல, முகத்தை பார்த்தே முடிவு செய்யப்பட்டவை. அதனால் காலங்கடந்து அது மக்கள் மனதில் நிலைத்து நிற்கிறது. மக்கள் கருத்தறியாமல் நிறைவேற்றப்படும் திட்டங்கள் காலப்போக்கில் உருத்தெரியாமல் போய்விடும், உருவாக்கியவர்கள் பெயரையும் அடியோடு கெடுத்துவிடும் என்பது கருத்து கேட்பு கூட்டம் நடத்தாமலே உறுதியான உண்மை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here