வட இந்திய நகரம் ஒன்றில் தூய்மை பணியாளர்களுக்கு மாடியில் இருந்து பூத்தூவியதை பார்த்தோம். நம் மாநிலத்தில் திருவிழாக்காலத்தில் கூத்தாடிகளுக்கு கொடுபப்துபோல் நன்கொடை, உணவு அளித்து மகிழ்கின்றனர்.
இதுவரை தூய்மை பணியாளர்களில் பெரும்பாலானோர் பணி நிரந்தரப்படுத்தப்படவில்லை. உரிய ஊதியம் வழங்கப்படவில்லை. அதிகாரிகளால் மரியாதையாக நடத்தப்படுவதில்லை என்பதெல்லாம் தூய்மையான உண்மை.
இப்போது அது பிரச்சினையல்ல. நீங்கள் பூத்தூவுங்கள் அல்லது புகழுங்கள். நன்கொடை அளியுங்கள் அல்லது நாலு நல்ல வார்த்தை பேசுங்கள். அது உங்கள் விருப்பம்.
ஆனால், இன்னமும் அவர்கள் பாதுகாப்பற்ற முறையிலேயே பணி செய்கிறார்கள், ஊர்மக்களின் மாசுகளை தங்கள் மேல் சுமத்திக்கொள்கிறார்கள் என்பதை மட்டும் நினைவில் வையுங்கள்.
அவர்களுக்கு உடனடி தேவையெல்லாம் போதிய அளவில் கையுறை முக கவசத்தோடு, குப்பையை, சக்கடையை கையாள இயந்திரங்கள்தாம். அது இன்னமும் வழங்கப்படவில்லை.
அவர்கள் கொரோன தொற்று பணியின்போது இறந்தால் நிவாரணம் கொடுப்பதாக கூறியிருக்கிறார்கள். ஆனால், தொழிலாளர் வைப்பு நிதியையும், மருத்துவ காப்பீட்டையும் இன்னும் யாவருக்கும் வழங்கவில்லை. சாதாராணமாகவே அவர்கள் செய்யும் வேலை உயிர் குடிக்கும் நோய் பரவும் வேலை என்பதால், அவர்கள் எப்போது இறந்தாலும் 50 லட்ச ரூபாய் உடனடியாக விடுக்கப்படவேண்டும்.
மற்ற ஊழியர்களுக்கு போல் இவர்களுக்கு கண்ணியமான மாத ஊதியம் வழங்குவதைப்பற்றி இனியாவது முடிவெடுக்க வேண்டும்.