மத்திய தொழிலாளர் நலத்துறை மந்திரி சந்தோஷ் குமார் கங்க்வாரை சந்தித்து நெல்லை எம்.பி. ஞானதிரவியம் மனு கொடுத்தார்.
மனுவில் ‘எனது நாடாளுமன்ற தொகுதியில் சுமார் 6 லட்சம் பீடித்தொழிலாளர்கள் உள்ளனர். அவர்களுக்காக முக்கூடலில் பீடித்தொழிலாளர் 2007 & 2008ல் மருத்துவமனை தொடங்கப்பட்டது.
ஆனால், கடந்த 10 ஆண்டுகளாக மருத்துவமனை செயல்படவில்லை. அந்நிலையில், 2017ல்புதிய ஆணையரை நிரந்தரமாக நியமித்த பின்னர் தற்போது செயல்பட தொடங்கியுள்ளது.
இங்கு ஆரம்பத்தில் 24 மணி நேரம் சேவை தொடர்ந்து வந்தது. தற்போது 8 மணி நேரம் மட்டுமே செயல்படுகிறது. அங்கு வெளி நோயாளிகள் வந்து சிகிச்சை பெறும் வகையில் மட்டுமே மருத்துவமனை இயங்கி வருகிறது.
மருத்துவமனையை சீரமைக்க ரூ.2 கோடியே 18 லட்சத்தை ஒதுக்கீடு செய்யக் கோரி மத்திய தொழிலாளர் நலத்துறைக்கு கடந்த பிப்ரவரி மாதம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அந்த தொகை கூட இதுவரை அளிக்கப்படவில்லை. இந்த பீடித்தொழிலாளர் நல மருத்துவமனையை ஒரு முன்னோடி மருத்துவமனையாக தரம் உயர்த்தி விரிவுபடுத்த வேண்டும்’ என கூறப்பட்டுள்ளது.









