தூத்துக்குடி மாவட்டம், தட்டார்மடம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முதலூர் பகுதியைச் சேர்ந்த முத்துக்கிருஷ்ணன் (43) என்பவரது குடும்பத்தினருக்கும், சாத்தான்குளம் ஆனந்தபுரம் பகுதியைச் சேர்ந்த ஞானபிரகாஷ் என்பவருக்கும் இடையே, முத்துக்கிருஷ்ணனின் 15 வயது மகளுடன் ஞானபிரகாஷ் கொண்டிருந்த காதல் தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இதனால் ஞானபிரகாஷ் அடிக்கடி முத்துக்கிருஷ்ணன் குடும்பத்தினருடன் தகராறில் ஈடுபட்டு வந்ததாகத் தெரியவருகிறது.

இந்நிலையில், நேற்று (22.10.2026) இரவு முத்துக்கிருஷ்ணனின் வீட்டிற்குச் சென்ற ஞானபிரகாஷ், அவர்களுடன் தகராறில் ஈடுபட்டு, முத்துக்கிருஷ்ணன், அவரது மனைவி மேரி விஜிலா (39) மற்றும் அவர்களது 12 வயது மகன் ஆகியோரை அரிவாளால் தாக்கியுள்ளார். இதில் மேரி விஜிலா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், அங்கிருந்த இரண்டு சிறுமிகளையும் ஞானபிரகாஷ் தன்னுடன் அழைத்துச் சென்று தனது வீட்டில் வைத்திருந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
இச்சம்பவம் குறித்து தகவலறிந்த தட்டார்மடம் காவல் நிலைய போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்று, காயமடைந்த முத்துக்கிருஷ்ணன் மற்றும் அவரது மகனை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்த மேரி விஜிலாவின் உடலைக் கைப்பற்றி, உடற்கூராய்வுக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், ஞானபிரகாஷின் வீட்டில் இருந்த இரண்டு சிறுமிகளையும் காவல்துறையினர் பத்திரமாக மீட்டுள்ளனர். இச்சம்பவத்தில் தொடர்புடைய ஞானபிரகாஷைத் தேடி காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சம்பவ இடத்தை டிஐஜி திருநாவுக்கரசு, எஸ் பி சிவப்பிரகாஷ் ஆகியோர் ஆய்வு செய்து விசாரணையை முடுக்கி விட்டு உள்ளனர்












