அமெரிக்காவில் மர்ம நோய்: 5 பேர் உயிரிழப்பு

0
386

அமெரிக்காவில் மர்மமான நுரையீரல் நோய் பரவி வருகிறது. இ-சிகரெட் புகைத்த நூற்றுக்கணக்கானோர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இளைஞர்கள் பலர் கோமாவில் விழுந்துள்ளனர். இந்த நோய் தாக்கியவர்கள் சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர். அந்த வகையில் பரிசோதிக்கப்பட்ட ஆய்வுக்கூட மாதிரிகளில் எந்த பொருளும் சந்தேகத்துக்கு இடம் அளிக்கிற வகையில் கண்டறியப்படவில்லை.

இந்த நிலையில் இப்போது நியூயார்க் நகர புலனாய்வாளர்கள் வைட்டமின்-இ எண்ணெய் கொண்ட கள்ளச்சந்தை கஞ்சா மின் சிகரெட் தயாரிப்புகளில் கவனம் செலுத்துவதாக தகவல்கள் கூறுகின்றன. கலிபோர்னியா, மின்னசோட்டா உள்ளிட்ட மாகாணங்களில் இந்த மர்ம நுரையீரல் நோய் தாக்கி 5 பேர் உயிரிழந்து விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

வடக்கு கரோலினாவில் உள்ள நுரையீரல் மருத்துவ நிபுணர் டேனியல் பாக்ஸ் கூறும்போது, “நான் பரிசோதித்த நோயாளிகளுக்கு நிமோனியா தொற்று இல்லாத லிபோய்டு நிமோனியா இருப்பதாக தெரிய வந்தது. இது எண்ணெய்கள் அல்லது லிபிட் (கொழுப்பு) கொண்ட பொருட்கள் நுரையீரலுக்குள் நுழையும் போது ஏற்படலாம்” என்றார்.

நியூயார்க் மாகாணத்தில் ஆய்வுக்கூடங்களில் நடத்தப்பட்ட சோதனைகளில், அங்கு பாதிக்கப்பட்ட 34 பேரும் பயன்படுத்திய கஞ்சா குழாய்களில் அளவுக்கு அதிகமான வைட்டமின்-இ எண்ணெய் படலங்கள் இருப்பது தெரிய வந்தது.

வைட்டமின்-இ சத்து வாய் வழியாக, சரும வழியாக எடுக்கக்கூடியது என்ற போதும் அதை உள்ளுக்குள் இழுக்கிறபோது அது தீங்கை விளைவிக்கும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here