கூட்டுறவு சங்கங்களில் மகாசபை கூட்ட மோசடி

0
23

தமிழ்நாட்டில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் சங்கச் சட்டப்படி நிறுவப்பட்டு இயங்குபவை ஆகும். அது சங்க உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படும் நிர்வாகக் குழுவால் செயல்படுத்தப்படும். சங்க நிர்வாகம் 6 மாதங்களுக்கு ஒரு முறையோ தேவைப்படும் போதோ, பொதுக்குழுவைக் கூட்டி முக்கிய தீர்மானங்களை நிறைவேற்ற வேண்டும்.

உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாக குழு இருந்தவரை இது ஓரளவு சரியாக கடைப்பிடிக்கப்பட்டது. தற்போது அதிகாரிகள் மேற்பார்வையில் செயலாட்சியரால் நடத்தப்படும் நிர்வாகத்தில் பொதுக்குழு கூட்டங்கள் முறையாக நடத்தப்படுவதில்லை.

ஏதோ ஒரு பத்திரிகையில் விளம்பரம் செய்துவிட்டு, ‘கோரம்’ உறுப்பினர்கள் வராவிட்டாலும் தாங்களாகவே முக்கிய தீர்மானங்களை நிறைவேற்றிக் கொள்கிறார்கள். இதன் மூலம் ஊழல் நடைபெறுவது எளிதாகிறது. உறுப்பினர்களுக்கு தெரியாமலே ஆட்சேபத்துக்குரிய தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகின்றன.

இப்படித்தான் கடந்த திங்கட்கிழமை சாத்தான்குளம் மற்றும் கலுங்குவிளை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் பொதுக்குழு கூட்டம் நடத்தப் போவதாக அறிவிக்கப்பட்டது. காலை 11:00 மணிக்கு கலுங்குவிளை தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க பொதுக்குழு அறிவிக்கப்பட்ட நிலையில் 600க்கும் மேற்பட்ட உறுப்பினர்களில் மூன்று பேர் மட்டுமே வந்திருந்தனர். செயலாட்சியர் வளன் மிக்கேலும் ஆஜராகாத நிலையில், பொதுக்குழு கூட்டத்தை ரத்து செய்யுமாறு கூறிவிட்டு 3 உறுப்பினர்களும் சென்று விட்டனர்.

இதுபோன்று இதற்கு முன்பும் கூட்டங்கள் கூட்டப்பட்டு, உறுப்பினர் வராத நிலையில், வங்கிக்கு வரும் வாடிக்கையாளர்களிடம் கையொப்பம் பெற்ற அவலம் நிகழ்ந்ததாக கூட்டத்திற்கு வந்திருந்த முன்னாள் நிர்வாக குழு உறுப்பினர் ஹைகோர்ட்துரை வருத்தம் தெரிவித்தார்.

இந்தக் கூட்டத்தில் உறுப்பினர், சேர்க்கை நீக்கம் குறித்தும் அறிவிக்கப்பட்டிருந்தது. பொதுக்குழு உறுப்பினர்கள் ஒப்புதல் இல்லாமல் தன்னிச்சையாக உறுப்பினர்களை சேர்க்க முயல்வதாக முன்னாள் நிர்வாக குழு உறுப்பினர் அனீஸ் அந்தோணி குற்றம் சாட்டினார். இதற்கு முன்பு ஒரு கூட்டத்தில் குறைவெண்ணிக்கை கூட வராத நிலையில் உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டதை தடுத்து நிறுத்தியதாகவும் அவர் தெரிவித்தார் .

தற்போதும் பல்வேறு மாவட்டங்களில் கூட்டுறவு கடன் சங்க பொதுக்குழு கூட்ட அறிவுப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. கூட்டங்கள் முறையாக நடப்பதை அந்தந்த கூட்டுறவு துணைப் பதிவாளர்கள் கண்காணிக்க வேண்டும். வரவு, செலவு உட்பட அனைத்து தீர்மானங்களும் உறுப்பினர்களின் பெரும்பான்மை ஒப்புதலுக்குப் பின்பே நிறைவேற்றப்பட வேண்டும் என்று கூட்டுறவாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here