மீன் கண்டெய்னர் லாரியில் இலங்கைக்கு கடத்த முயன்ற 3 கோடி ரூபாய் மதிப்புள்ள 318 கிலோ கஞ்சா பறிமுதல் -குளத்தூர் அருகே கார், கன்டெய்னர் லாரியுடன் 3 பேர் கைது
ஆந்திர மாநிலத்தில் இருந்து மீன் ஏற்றிச் செல்லும் கண்டெய்னர் லாரி மூலமாக இலங்கைக்கு கஞ்சா கடத்தப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து OCIU (ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற உளவுப் பிரிவு) போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேஷ் தலைமையிலான போலீசார், தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் காவல் உட்கோட்டத்திற்குட்பட்ட குளத்தூர் போலீஸ் நிலைய எல்லையில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது புளியங்குளம் கிராமத்தில் சந்தேகத்திற்கிடமாக வந்த வாகனங்களை போலீசார் சோதனையிட்டனர். இதில், மீன் ஏற்றிச் செல்லும் கன்டெய்னர் லாரியில் கஞ்சா கடத்தி வரப்பட்டது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் நடத்திய சோதனையில் 159 கிலோ எடையுள்ள 2 பொட்டலங்கள் என மொத்தம் 318 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், கஞ்சா கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட AP 40 ML 0491 என்ற மகிந்திரா XUV எக்ஸ்யூவி கார் மற்றும் AP 39 UU 3743 என்ற கன்டெய்னர் லாரியும் பறிமுதல் செய்யப்பட்டன.
இதுதொடர்பாக திருவள்ளூர் மாவட்டம் ஈல்லோ மதி பகுதியைச் சேர்ந்த தேவரியா மகன் டி.டி. ஜோஷ்வாகணராஜ் (47), ஆந்திர மாநிலம் காக்கிநாடாவைச் சேர்ந்த அர்ஜுனன் மகன் தன்வேல் (51), பிரகாசம் மாவட்டம் தங்குடூரைச் சேர்ந்த நாராயணசுவாமி மகன் யாதலா ஸ்ரீனிவாஸ் கல்யாண் (24) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா மற்றும் வாகனங்கள் கோவில்பட்டி மதுவிலக்கு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டு, விசாரணை நடைபெற்று தூத்துக்குடி போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவு குற்ற புலனாய்வுத்துறையரிடம் ஒப்படைத்தனர். கஞ்சா எங்கிருந்து வாங்கப்பட்டது, இலங்கையில் யாருக்கு கொண்டு செல்லப்படுகிறது. இதில் வேறு யாருக்கும் தொடர்பு உண்டா? என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.














