கல்லணையை திறக்க ரூ.6 கோடி செலவு செய்து வர வேண்டிய அவசியம் இல்லை. சம்பா தாளடி சிறப்பு தொகுப்பு திட்டத்தை மட்டும் லண்டன் செல்வதற்கு முன்பாக அறிவித்துவிட்டு செல்லவும்” என முதல்வர் விஜய்க்கு தமிழ்நாடு காவிரி உழவர்கள் பாதுகாப்பு சங்க செயலாளர் சுவாமிமலை விமல் நாதன் மின்னஞ்சல் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அவர் அனுப்பியுள்ள மின்னஞ்சலில், “சென்ற 28/ 08/2026 அன்று தஞ்சை மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் மேட்டூர் அணையை திறக்கின்ற மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தவறாமல் கல்லணையையும் திறக்க வர வேண்டும் என்று உழவர்கள் சார்பில் வேண்டுகோள் விடுத்தோம்.
ஆனால் சென்ற 01 /09 /2026 அன்று முதலமைச்சர் மேட்டூர் அணை திறப்பதற்கு விமான பயணத்திற்கு மட்டும் ரூபாய் ஆறு கோடி செலவிடப்பட்டது என்கின்ற செய்தியை கேட்டு உழவர்கள் மட்டுமல்லாமல் அனைத்து பொதுமக்களும் மிகவும் அதிர்ந்து போய் இருக்கிறோம். இவ்வளவு பெரிய தொகையை செலவிட்டு அணை திறக்கத்தான் வேண்டுமா? என்கின்ற கேள்விகள் நியாயமாக எழுந்து விட்டன!.
தமிழ்நாடு அரசு மிகுந்த நிதி நெருக்கடியில் தவித்துக் கொண்டிருக்கின்ற இந்த வேளையில் மேட்டூர் அணைக்கு இவ்வளவு பணம் செலவு செய்து வர வேண்டிய அவசியம் இல்லை! என்று தான் எல்லோர் மனதிலும் தோன்றுகிறது.
197 7 ஆம் ஆண்டுக்கு முன்பு வரை ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்ட ஆட்சியரின் கருத்துக்களை ஒப்புதலை கேட்டு அதன் பின்னர் தான் சேலம் மாவட்ட ஆட்சியர் மேட்டூர் அணை திறக்கின்ற வழக்கம் இருந்து வந்தது.
பின்னர் மேட்டூர் அணை திறப்பிலும் அரசியல்வாதிகளின் தலையீடுகள் அதிக அளவில் வரத் தொடங்கியதில் இருந்து மேட்டூர் அணை திறப்பதில் நடைமுறை மாற்றங்கள் செய்யப்பட்டது.
செலவிடப்பட்ட பணம் யாருடையதாக இருந்தாலும் அது மிகப்பெரிய தொகை என்பது மறுக்க முடியாது! எதிர்வரும் ஆண்டுகளிலும் இவ்வளவு தொகை செலவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். மேட்டூர் அணையை சேலம் மாவட்டத்தில் உள்ள ஒரு உழவர் உழவு தொழிலாளிகளை கொண்டே இனிவரும் காலங்களில் திறந்து விடலாம். வீண் நிதி செலவுகளை தவறாமல் தவிர்த்து நிதியை சிக்கனப்படுத்தலாம். எனவே, கல்லணை திறப்பிற்கு தாங்கள் வராமல் இருப்பதே சரி எனப்படுகிறது.
அதே வேளையில், சம்பா தாளடி பயிர்கள் சாகுபடி செய்வதற்கு உழவர்களுக்கு முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா மற்றும் மு க ஸ்டாலின் ஆகியோர் காலத்தில் சம்பா சிறப்பு தொகுப்பு திட்டங்கள் அறிவிக்கப்பட்டதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
சிறப்பு தொகுப்பு திட்டத்தை தாங்கள் சட்டமன்றத்தில் விதி 110 கீழ் அறிவித்துவிட்டு, திட்டத்திற்காக ஏக்கர் ஒன்றுக்கு ரூபாய் 8000 வீதம் லண்டன் செல்வதற்கு முன்பாக அறிவிப்பு செய்திட வேண்டும்.
மேலும் சட்டமன்றத்தில் தாங்கள் ஏற்கனவே அறிவித்த குறுவை சிறப்பு தொகுப்பு திட்டம் நிதி வழங்கப்பட்டு விட்டதாக தகவல் வெளியிட்டீர்கள் அது தவறான தகவலாகும்.
தாங்கள் ஏற்கனவே ஜூன் மாதத்தில் அறிவித்த குறுவை சிறப்பு தொகுப்பு திட்டம் ஏக்கருக்கு ரூபாய் 4000 இன்னும் முழுமை அடையவில்லை இன்னும் பல்லாயிரக்கணக்கான உழவர்களுக்கு அவர்களது வங்கி கணக்கில் வந்து சேரவில்லை என்பதே கள யதார்த்தம்.
எனவே தங்களால் அறிவிக்கப்பட்ட குறுவை சிறப்பு தொகுப்பு திட்ட நிதியை உடனடியாக கிடைக்க நடவடிக்கை தேவை.
குறுவையில் மாற்று பயிர் செய்யுங்கள் என்று உணவுத்துறை அமைச்சர் வேண்டுகோள் விடுத்தார் ஆனால் மாற்று பயிர் விவசாயிகளுக்கு எவ்வித சிறப்பு தொகுப்பு திட்டமும் அறிவிக்கப்படவே இல்லை.
நாங்கள் சம்பாத்தாளடி பயிர்களுக்கு கேட்கின்ற சிறப்பு தொகுப்பு திட்டம் என்பது தங்களுடைய தேர்தல் கால பரப்புரையில் தேர்தல் அறிக்கையில் …”விவசாயிகள் விவசாயக் கூலி தொழிலாளர்கள் மற்றும் மீனவர்கள் நலன் என்ற தலைப்பில் வரிசை எண் : 02ல்.”. வெற்றி விவசாயி உரிமைத்தொகை!” என்ற தலைப்பில் சொந்தமாக விவசாய நிலம் வைத்துள்ள ஒவ்வொரு விவசாயிகளின் குடும்பத்திற்கும் விதைப்புக்கான நிதி உதவியாக ஆண்டுக்கு ரூபாய் 15,000 இரண்டு தவணைகளில் வழங்கப்படும் விதைப்புக்கான செலவுகளை சமாளிப்பதற்கு இந்த நிதி உதவியாக இருக்கும்’! என்று மிகத் தெளிவாக சொல்லப்பட்டுள்ளது.
எனவே மேற்படி ரூபாய் 15 ஆயிரத்தில் ரூபாய் 8 ஆயிரத்தை சம்பா தாளடி சிறப்பு தொகுப்பு திட்டமாக சொந்த நிலம், குத்தகை நிலம் உள்ள உழவர்கள் என்ற பாரபட்சம் இல்லாமல் அனைவருக்கும் வழங்கிட வருகின்ற 06/09/ 2026 ஞாயிறு அன்று காவிரி சமவெளி மாவட்டங்களுக்கு பாசனத்திற்கு கல்லணை அணை திறக்கப்படுகின்ற அன்று தவறாமல் தாங்கள் சென்னையில் இருந்தபடியே அறிவிப்பு செய்வது மிகச் சிறப்பாக இருக்கும்.












