சாத்தான்குளம் அருகே உள்ள படுக்கப்பத்து கீழத்தெருவை சேர்ந்தவர் திருநீலகண்டன் மனைவி சுந்தரி (78). இவர்களுக்கு இரு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். அதில் மகள் உடன்குடியிலும், ஒரு மகன் சென்னை ரெட் ஹில்ஸ் பகுதியிலும் இருந்து வருகின்றனர். கணவர் திருநீலக கண்டனும், ஒரு மகனும் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டனர்.
இதனால் சுந்தரி மட்டும் படுக்கப்பத்தில் உள்ள அவரது வீட்டில் இருந்து வந்தார். மகன் அம்பிகை ராமன் குடும்பத்துடன் ரெட்ஹில்ஸ் பகுதியில் இருந்து பழைய இரும்பு கடை நடத்தி வந்தார்.
இந்த நிலையில் அம்பிகை ராமன் திடீரென மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். அவரது இறந்த செய்தியை படுக்கப்பத்து கிராமத்தில் உள்ள அவரது தாயார் சுந்தரிக்கு அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனால் அதிர்ச்சியில் உறைந்த வள்ளி, திடீரென மயக்கம் போட்டு விழுந்தார். உடன் அருகில் இருந்த உறவினர்கள் அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
மகன் இறந்த செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்த தாய் உயிரிழந்த சம்பவம் சாத்தான்குளம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே சென்னையில் இறந்த மகன் உடல், படுக்கபத்துக்கு அடக்கம் செய்ய வாகனத்தில் கொண்டு வரப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தாய் மற்றும் மகன் ஆகிய இருவரது உடல்களும் படுக்கப்பத்து கிராமத்தில் ஒரே நேரத்தில் அடக்கம் செய்யப்பட உள்ளன .













