பிரபல சமூக வலைத்தளங்களில் ஒன்றான டுவிட்டரின் தலைமை செயல் அதிகாரியான (சிஇஒ) ஜேக் டோர்சியின், டுவிட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளதாக டுவிட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஜேக் டோர்சியின் டுவிட்டர் பக்கத்தில் இருந்து திடீரென இனவெறி கருத்துக்களும், நாசி ஜெர்மனிக்கு ஆதரவான கருத்துக்களும் பதிவிடப்பட்டன. ஜேக்டோர்சியை பின் தொடரும் லட்சக்கணக்கான வலைத்தள வாசிகளுக்கு கடும் அதிர்ச்சியை இந்த பதிவு ஏற்படுத்தியது.
சிறிது நேரத்தில் இந்த பதிவுகள் நீக்கப்பட்டு விட்டன. இது குறித்து விளக்கம் அளித்த டுவிட்டர் நிறுவனம், ஜேக் டோர்சியின் கணக்கு ஹேக் செய்யப்பட்டுவிட்டதாக விளக்கம் அளித்தது. எனினும், தனது சிஇஓ கணக்கையே பாதுகாப்பாக வைத்திருக்க முடியாத டுவிட்டர் நிறுவனத்தால், எங்கள் கணக்குகளை எவ்வாறு பாதுகாப்பாக வைத்திருக்க முடியும் என்பன போன்ற கேள்விகளை எழுப்பிய டுவிட்டர் பயனாளர்கள், கடுமையாக விமர்சித்தனர்.
டுவிட்டர் நிறுவனம் அளித்த விளக்கத்தில், தங்களது சொந்த பாதுகாப்பு அமைப்பில் எந்தவித சமரசமும் செய்யப்படவில்லை எனவும், டுவிட்டர் கணக்குடன் இணைக்கப்பட்டு இருந்த மொபைல் எண் மூலமாக கணக்கு ஹேக் செய்யப்பட்டுவிட்டதாக தெரிவித்துள்ளது.















