பாளை. ரகுமத்நகரில் வசித்த ஆசிரியர் சாம்சன் ( 56) இன்று நஞ்சு அருந்தி தற்கொலை செய்து கொண்டார். இவர் கட்டளை பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வந்தார்.
சொந்த ஊர் கொங்கராய குறிச்சி. இரண்டு பெண் குழந்தைகள். மனைவி மேரி விக்டோரியா. இவர் ஸ்ரீவைகுண்டம் அருகிலுள்ள மணக்கரை பள்ளியில் தலைமை ஆசிரியையாக உள்ளார்.
தற்கொலை செய்து கொண்ட சாம்சன் ஆசிரியப் பணிியில் இருந்து கொண்டே பைனான்ஸ் தொழில் செய்து வந்துள்ளார். முதலில் தன் கையிலிருந்த சிறிய தொகையைக்கொண்டு பைனான்ஸ் தொழில் செய்து வந்தவர், பண ஆசையில் பிறரிடம் குறைந்த வட்டிக்கு வாங்கி அதிக வட்டிக்கு கொடுத்து சம்பாதித்து வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த ஆண்டு கொரோனா ஊரடங்கு காலத்தில் கடன் வாங்கிய பலர் முதலையும் வட்டியையும் செலுத்தவில்லை எனத் தெரிகிறது. இதனால் இவர் பல நாட்களாக மனக்குழப்பத்தில் இருந்துள்ளார்.
இன்று அதிகாலை 3 மணி அளவில் தனது வீட்டில் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து மயங்கி கிடந்ததை அவர் மனைவி கண்டு, ஹைகிரவுன்ட் அரசு மருத்துவ மனையில் சேர்த்துள்ளார். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் மாலையில் உயிரிழந்தார்.
சாம்சனிடம் 3 கோடி ரூபாய் வரை சிலர் கடன் பெற்றுக் கொண்டு ஏமாற்றி, தற்கொலைக்கு தூண்டியதாக அவரது மனைவி மேரி விக்டோரியாவும் சாம்சனின் நண்பர் தாமரைச்செல்வனும் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளனர்.
புகாரில் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள மருத்துவமனை உரிமையாளர் , பாளை தெற்கு பஜாரில் வசித்து வரும் எல்ஐசி முகவர், எண்ணெய் மில் உரிமையாளர் , பேட்டரி கடை உரிமையாளர் மற்றும் முருகன் குறிச்சியில் கம்ப்யூட்டர் சென்டர் வைத்திருப்பவர் ஆகியோர் பணத்தை தராமல் ஏமாற்றி தற்கொலை செய்ய தூண்டியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
எது எப்படியோ, சாம்சனும் அவரது மனைவியும்ஆசிரியராக பணியாற்றிய நிலையில், அந்த சம்பளமே அவர்கள் வாழ்வாதாரத்துக்கு தாராளமாக போதும். ஆனால், பண ஆசை அவர் உயிருக்கு எமன் ஆகிவிட்டது.









