முக்காணியில் நீதிமன்ற உத்தரவுப்படி பொதுமக்கள் வழிபாட்டுக்காக கோவில் திறப்பு…!
தூத்துக்குடி மாவட்டம் முக்காணியில் புலமாட சுவாமி கோவில் உள்ளது. இந்தக் கோவிலில் பல்வேறு தரப்பினர் வழிபட்டு வருகின்றனர். இங்கு ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் கோவில் கொடை விழா நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அந்த கோவிலை பூஜை செய்து நிர்வகித்துவரும் நாராயணன் தரப்பினருக்கும் பட்டு என்பவர் தரப்பினருக்கும் இடையே கோவில் நிர்வாகம் சம்பந்தமாக தகராறு ஏற்பட்டுள்ளது. தகராறு தொடர்பாக கூடுதல் கலெக்டர் மற்றும் தாசில்தார் முன்னிலையில் சமாதான கூட்டம் நடைபெற்றது. பின்னர் பட்டு தரப்பினர் இந்த கோவிலில் பூஜை செய்து வந்ததாக கூறப்படுகிறது இந்த நிலையில் கடந்த 10 மாதங்களுக்கு முன்பு நாராயணனின் தம்பியான பொங்கல் ராஜ் என்பவர் கொலை செய்யப்படுகிறார் இதனைத் தொடர்ந்து கோவிலை யாரும் திறக்க கூடாது என கோவில் பூட்டப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு நாராயணனின் உறவினரான சிவகுமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்குத் தொடர்ந்து கோவிலை திறக்க அனுமதி கேட்டுள்ளார். அப்போது கோவிலை திறந்து வழிபாடு செய்து கொள்ளுங்கள் கொடை நடத்துவது பற்றி உங்களுக்குள் பேசி தீர்த்துக் கொள்ளுங்கள் என அறிவுறுத்தியுள்ளது. அதனைத் தொடர்ந்து கோவில் திறக்கப்பட்டு உள்ளது. இதன் பின்னர் கடந்த மாதம் பட்டு தரப்பினர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு ஒன்றை தொடர்ந்து உள்ளனர் அதில் கோவிலில் வழிபாடு மட்டுமே செய்ய வேண்டும் ஆனால் நாராயணன் தரப்பினர் விழா நடத்துகின்றனர் என வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் கோவிலை மூட கடந்த டிசம்பர் 11ம் தேதி அன்று உத்தரவு பிறப்பித்தது. அதனைத் தொடர்ந்து கோவில் மூடப்பட்டது. பின்னர் சிவகுமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் கோவிலை திறந்து வழிபாடு செய்ய வேண்டும் என வழக்கு தொடர்ந்தார் இந்த வழக்கு விசாரித்த நீதிமன்றம் கோவிலை திறந்து வழிபாடு மட்டும் செய்து கொள்ளலாம் பூஜைகளோ திருவிழாக்களோ நடத்த கீழ் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து முடிவு செய்து கொள்ளலாம் என தீர்ப்பளித்தது அதன்படி கோவிலை இன்று பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஏரல் தாசில்தார் செல்வகுமார் திறந்து வைத்தார். இதில் ஆத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபாகரன் முக்காணி கிராம நிர்வாக அதிகாரி முத்து உட்பட கோவில் நிர்வாகிகள் பொதுமக்கள் உடன் இருந்தனர்.








