மிசோரம் மாநிலம் சியாஹா மாவட்டத்தில் திசோபி என்ற மலைக்கிராமம் உள்ளது. அந்த மலைக்கிராமத்திற்கு அம்மாவட்டத்தின் ஆட்சியர் டி.எம்.புபேஷ் சவுத்ரி திடீரென பார்வையிட சென்றார். அவரை பார்த்த கிராம மக்கள் வந்திருப்பது ஆட்சியர் என்ற விவரம் அறிந்த போது அவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
மாவட்ட ஆட்சியர் தங்கள் கிராமத்திற்கு வருவதை அறிந்து கொண்ட அனைவரும் தங்கள் மகிழ்சியை ஆடியும் பாடியும் வெளிப்படுத்தினர். ஏனென்றால் உயர் பதவியில் உள்ள அதிகாரி ஒருவர் அந்த கிராமத்திற்கு வருவது இதுவே முதல் முறை ஆகும்.
இதனை தொடர்ந்து உள்ளூர்வாசிகள் சிலர், மரம் மற்றும் துணிகளைக் கொண்டு தயாரிக்கப்பட்ட பல்லக்கு ஒன்றை உருவாக்கி அதில் பூபேஷ் சவுத்ரியை அமர வைத்து தங்கள் தோள்களில் சுமந்து கொண்டு கிராமத்தின் வழியாக வலம் வந்தனர்.
சமீபத்திய இடைவிடாத மழையால் இந்த பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டதைத் தொடர்ந்து கிராமத்தின் சாலைகள் சேதமடைந்தன. இதை நேரில் பார்வையிடவே மாவட்ட ஆட்சியர் கிராமத்திற்கு வருகை தந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.













