தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் புறவழிச்சாலை என அழைக்கப்படும் புது வேத கோவில் வடக்கு தெரு பகுதியில் குழாய் பதிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளால் சிஎஸ்ஐ சர்ச் அருகே சிகப்பு கயிறு கட்டி புறவழிச் சாலை முழுவதுமாக மூடப்பட்டுள்ளது.
இதன் காரணமாக சாத்தான்குளம் புறவழிச் சாலை வழியாக பேருந்து நிலையம், திருச்செந்தூர், நாசரேத், உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் வாகனங்கள் மற்றும் பேருந்துகள் புறவழிச்சாலைக்குள் செல்ல முடியாமல் நேரடியாக சாத்தான்குளம் பஜார் பகுதிக்குள் வருகிறது. இதனால் பஜார் பகுதியில் உள்ள வியாபாரிகளுக்கும் பேருந்து மற்றும் வாகன ஓட்டிகளுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வருகிறது.
மேலும் சாத்தான்குளம் பஜார் ஆனது ஒரு வழி பாதையாக செயல்பட்டு வரும் நிலையில் குழாய் பதிக்கும் பணி காரணமாக எதிர் திசையில் வாகனங்கள் வருகிறது. இதனால் பொதுமக்கள் வியாபாரிகள் மிகுந்த அவதி அடைகின்றனர்.
இது குறித்து சாத்தான்குளம் வர்த்தக சங்க தலைவர் கண்ணன் கூறுகையில்…, பொதுவாக இது போன்ற குழாய் பதிக்கும் பணிகள் இரவு நேரங்களில் தான் நடைபெறும் அவ்வாறு நடைபெறும் என்பதால் வியாபாரிகளுக்கு எந்த வித இடைஞ்சலும் ஏற்படாது. ஆனால் தற்போது குழாய் பதிக்கும் பணிகள் பகலில் நடைபெற்று வருவதால் வியாபாரிகளுக்கு இடைஞ்சல் ஏற்படுகிறது. மேலும் எதிர் எதிர் திசையில் அரசு பேருந்துகள் மற்றும் வாகனங்கள் வருவதால் வாகன ஓட்டிகளுக்கும் இடையே தகராறு ஏற்படுகிறது. எனவே குழாய் பதிக்கும் பணிகளை இரவு நேரங்களில் நடத்திடவும், வியாபாரிகளுக்கு இடைஞ்சல் இல்லாமல் அரசு பணிகளை செய்ய வேண்டும் எனவும் அவர் தனது கண்டன அறிக்கையில் தெரிவித்துள்ளார்.













