துாத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக மூன்றாவது தளத்தில், கனிம வளத்துறை அலுவலகம் செயல்படுகிறது. இந்த அலுவலகத்தில் மாவட்ட, ‘மினரல் ஃபவுண்டேஷன் டிரஸ்ட்’ என்ற அரசு சார்ந்த பிரிவு செயல்படுகிறது. அரசுக்கு குவாரி உரிமையாளர்கள் செலுத்தும் கட்டணத்தில், 5 சதவீதம் இந்த டிரஸ்ட் பெயரில் வரவு வைக்கப்படும்.
அத்தொகை, குவாரி அமைந்துள்ள பஞ்சாயத்து பகுதியில், வளர்ச்சி பணிகள் மேற்கொள்ள ஒதுக்கீடு செய்யப்படும். இந்த பிரிவில், கணக்கு அதிகாரியாக மறவன்மடம் பகுதியை சேர்ந்த தமிழ்ச்செல்வி (43) என்பவர் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வந்தார். 15 ஆண்டுகளாக வேலை பார்த்து வந்த இவர், ஜூலை 27ம் தேதிக்குப் பின், பணிக்கு வரவில்லை.
இதுகுறித்து, மாவட்ட ஆட்சியருக்கு கனிம வளத்துறை உதவி இயக்குனர் பிரியா கடிதம் அனுப்பினார். ’15 ஆண்டுகளாக பணியில் இருந்த ஒப்பந்த ஊழியர், திடீரென பணிக்கு வராததற்கு காரணம் ஏதும் உள்ளதா’ என, ஆட்சியர் பகவத் கேள்வி எழுப்பி, தமிழ்ச்செல்வி குறித்து முழு தகவலை தருமாறு உத்தரவிட்டார்.
இதற்கிடையே, தமிழ்ச்செல்வி மாயம் குறித்து, கனிம வளத்துறை அதிகாரிகள் விசாரித்தபோது, 60 லட்சம் ரூபாய் வரை முறைகேடு நடந்திருப்பது தெரியவந்துள்ளது. அதிகாரிகள் சிலர்: குவாரி உரிமையாளர்கள் கட்டணத்தை, இ-செலான் செலுத்தி, ரசீது பெற வேண்டும். தமிழ்ச்செல்வி மூலம் பலர், லட்சக்கணக்கில் பணம் கொடுத்து, கட்டணத்தை செலுத்தியுள்ளனர்.
குவாரி உரிமையாளர் ஒருவர், 11 லட்சம் ரூபாய் கட்டணம் செலுத்திய நிலையில், அவரது பெயரில், 2 லட்சம் மட்டுமே வரவு வைக்கப்பட்டுள்ளது. ஆனால், அவருக்கு வழங்கப்பட்ட ரசீதில், 11 லட்சம் ரூபாய் என, குறிப்பிடப்பட்டுஉள்ளது. இ -செலானில் திருத்தம் செய்து, 20 குவாரி உரிமையாளர்களிடம், 60 லட்சம் ரூபாய் வரை முறைகேடு நடந்துள்ளது. என அவர்கள் கூறினர்.
இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.









