சொன்னதை செய்த ஸ்ரீவை.டிஎஸ்பி – கடம்பா குளத்தில் மண் திருடிய 27 டிராக்டர்கள் பறிமுதல்

0
978

“கடலில் பாதி கடம்பா” என அழைக்கப்படும் கடம்பாக் குளத்தில் இருந்து செங்கல் சூளைகளுக்காக எந்த முன் அனுமதியும் இன்றி டிராக்டர்களில் மணல் கடத்தப்படுவதை நமது தென்னாடு. காம் வலைத்தளத்தில் தகுந்த ஆதாரங்களுடன் சுட்டிக்காட்டி செய்தி வெளியிடப்பட்டது.

https://youtu.be/c4Zvc9kExzA?si=CvT71Oic2erF5wiS

மேலும், இது தொடர்பாக தாமிரபரணி பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் தூத்துக்குடி மாவட்ட எஸ்பி பாலாஜி சரவணனிடம் ஏற்கனவே தாமிரபரணி பாதுகாப்பு இயக்க பொதுச் செயலாளர் அய்கோ சார்பில் புகார் அளிக்கப்பட்டது. அவரும் ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி மூலமாக நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

இந்த நிலையில் ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பியாக பொறுப்பேற்ற ராமகிருஷ்ணனும் கனிமவளக் கடத்தலை தடுத்து நிறுத்துவேன் என்று உறுதியளித்தார்.

சொன்னது போலவே, பொறுப்பேற்ற 24 மணி நேரத்தில் கடம்பா குளம் உள்ளிட்ட சில குளங்களில் இருந்து செங்கல் சூளைகளுக்கு அனுமதியின்றி மண் ரெடி வந்த 27 டிராக்டர்களை அதிரடியாக பறிமுதல் செய்தார்.

ஸ்ரீவைகுண்டம் காவல்நிலைய எல்லையில் 17 டிராக்டரும், ஆழ்வார்திருநகரி காவல்நிலைய எல்லையில் 10 டிராக்டரும் பறிமுதல் செய்யப்பட்டன

இந்த நடவடிக்கையை தாமிரபரணி பாதுகாப்பு இயக்க பொது செயலாளர் அய்கோ வரவேற்று அறிக்கை வெளியிட்டார். அதில் கூறியிருப்பதாவது :

நம் முன்னோர்கள் நமக்கு விட்டுச் சென்ற மண் முதலான இயற்கை வளங்களை பாதுகாப்பது தான் மனிதர்களாக பிறந்த நமக்கு முதல் கடமை. ஆனால் அதற்கு மாறாக, ஆற்றிலும் குளத்திலும் கால்வாய்களிலும் மண்ணையும், மழை பொழிவிக்கும் மலைப்பகுதிகளில் கற்களையும் லாப வெறியுடன் கடத்தி வருகின்றனர்.

மண்ணைக் காப்பது தான் மக்களை காப்பது என்ற அடிப்படையில், புதிதாக காவல் பொறுப்புக்கு வந்த டி எஸ் பி,’ கனிமவளக் கடத்தலை தடுப்பேன்’ என்ற சபதத்துடன் 27 டிராக்டர்களை பறிமுதல் செய்தது பாராட்டுரியது. அதேபோல், எங்களுக்கெல்லாம் உயிர் ஆதாரமாக விளங்கும் தாமிரபரணியில் இருந்தும் மண், நீர் திருட்டை தடுக்க வேண்டும் என்று கோருகிறோம்.

குளங்களில் கள்ளத்தனமாக மண் அள்ளுவதற்கு உடந்தையாக இருக்கும் கனிம வள, வருவாய், பொதுப்பணித்துறை அதிகாரிகள் இது முதலாவது திருந்த வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அவர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here