சாத்தான்குளம் அருகே வியாபாரி சங்க பிரமுகர் சசிகரன் தோட்டத்தில் ரூ 20 கோடி மதிப்புள்ள 2100 கிலோ கஞ்சா இன்று பிடிபட்டது. மதுரை கீரைத் துறையில் கஞ்சாவுடன் பிடிபட்ட வியாபாரி ஒருவர் கொடுத்த தகவலின் பெயரில் இந்த கஞ்சா புதையல் சிக்கியது.
கஞ்சா பிடிபட்ட தோட்டத்தை சசிகரனிடமிருந்து தூத்துக்குடியைச் சேர்ந்த பிரபல கடத்தல்காரர் ஆரோன் என்பவர் விலைக்கு வாங்க முன்பணம் கொடுத்து இருந்ததாக கூறப்படுகிறது. ஆனாலும், கிரையம் முடிவதற்கு முன்பே தோட்டத்தை பயன்படுத்திய ஆரோன், ஆந்திராவிலிருந்து கஞ்சா, பீடி இலைகளை வாங்கி வந்து அதை இலங்கைக்கு கடத்துவதற்கு சாத்தான்குளம் தோட்டத்தை குடோனாக பயன்படுத்தியது தெரியவந்துள்ளது.
இங்கிருந்து இலங்கைக்கு, கடல் மார்க்கமாக கஞ்சா கடத்தப்பட்டுள்ளது. ஆரோனும் அவரது கும்பலும் கடத்தலுக்கு பல்வேறு சிம் கார்டுகளை பயன்படுத்தியுள்ளனர். கைப்பற்றிய போலீசார், கூட்டாளிகள் நாலு பேரை பிடித்து விசாரித்து வருகின்றனர். இதற்கு முன்பு 2015ல் கேரளாவில் இருந்து தந்தம் கடத்தியதாக ஆரோன் மீது வழக்கு உள்ளது.
இந்தக் கடத்தலுக்கு தொடர்பு உள்ளதா? என்று சசிகரணிடமும் போலீசார் விசாரித்துள்ளனர். தற்சமயம் அவர் கோயம்புத்தூர் பகுதியில் இருப்பதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே, மதுரை போலீசார் வரும் தகவலை போதை வியாபார கும்பலுக்கு சாத்தான்குளத்தில் உள்ள உளவுத்துறை போலீஸ்காரர் ஒருவர் தெரிவித்திருக்கலாம் என்று காவல் அதிகாரிகள் சந்தேகப்படுகின்றனர்.









