சாத்தான்குளம் அருகே கஞ்சா வேட்டை நடத்தியது பற்றி போலீசார் விளக்கம்

0
1121

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள வேலன் புதுக்குளம் தோட்டத்தில் கைப்பற்றப்பட்ட கஞ்சா மூட்டைகள் தொடர்பாக மதுரை போலீசார் அளித்த தகவல்கள்:

மதுரை மாநகர் காவல் நிலையங்களில் கஞ்சா வழக்குகளில் சம்பந்தப்பட்டு தலைமறைவாக இருந்த ராஜ்குமார் மற்றும் ஜெ.கே என்ற ஜெயக்குமார் ஆகியோரை தேடி வந்தனர்.


அதனிடையே, மதுரை சிந்தாமணி ரிங்ரோடு வழியாக வாகனங்களில் கஞ்சா கடத்தப்படுவதாக மதுரை கீரைத்துறை காவல்நிலைய உதவி ஆய்வாளர் கருப்பசாமி தலைமையிலான தனிப்படையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.

அதனையடுத்து அங்கு வாகன சோதனையில் ஈடுபட்டபோது, அவ்வழியாக வந்த காரில் 40 கிலோ கஞ்சா இருந்தது. அதனை தொடர்ந்து காரை ஓட்டிவந்த மதுரை எல்லிஸ்நகரை சேர்ந்த ராஜ்குமாரிடம் விசாரணை நடத்தினர்.


அதில் ,
ராஜ்குமார், தனது கூட்டாளிகளான ஜெய்ஹிந்த்புரத்தை சேர்ந்த சுகுமாறன், தூத்துக்குடியை சேர்ந்த ராஜா, சுடலைமணி, மகேஸ்குமார் மற்றும் முத்துராஜ் ஆகியோருடன் மதுரை புதூரை சேர்ந்த ஜெ.கே என்ற ஜெயக்குமார் என்பவர் மூலம் ஆந்திரா மாநிலம் இராஜமுந்திரியில் இருந்து கஞ்சா வாங்கி, போலியான பதிவெண்ணை கொண்ட வாகனத்தில் கடத்திவந்து, அதனை தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகில் உள்ள வேலன்புதுக்குளம் என்ற கிராமத்தில் ராஜா என்பவரின் பொறுப்பில் உள்ள தோட்டத்தில் பதுக்கி வைத்திருப்பதாகவும், அதிலிருந்து 40 கிலோ கஞ்சாவை மதுரைக்கு எடுத்து வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.


இதனையடுத்து, கஞ்சா விற்பனைக்கு பயன்படுத்திய கார், 3 செல்போன்கள், மோடம் ஆகியவற்றை பறிமுதல் செய்து போதைப்பொருள் தடுப்பு பிரிவின் கீழ் வழக்குபதிவு செய்யப்பட்டது.
தொடர்ந்து, கீரைத்துறை காவல் ஆய்வாளர் பெத்துராஜ் தலைமையிலான தனிப்படை , கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த தூத்துக்குடி மாவட்டம், வேலன் புதுக்குளம் கிராமத்தில் உள்ள தென்னந்தோப்பிற்கு சென்றனர்.


அங்கு நின்று கொண்டிருந்த சரக்கு வாகனத்தை சோதனை செய்தபோது, அதில் சாக்கு மூட்டைகளில் 2ஆயிரம் கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்துள்ளது.
இதனை, காவல்துறையினர் கைப்பற்றிபோது அங்கிருந்து தப்பிக்க முயன்ற சுகுமாறன், ராஜா, சுடலைமணி, மகேஸ்குமார்,. முத்துராஜ் ஆகிய 6பேரையும் கைது செய்து விசாரணை நடத்தினர்.


அப்போது, மதுரையை சேர்ந்த ஜெ.கே என்ற ஜெயக்குமார் என்பவர் மூலமாக ஆந்திரா மாநிலம் இராஜமுந்திரியில் இருந்து 4 கோடி மதிப்பில் 2090 கிலோ கஞ்சா வாங்கி வந்து, தூத்துக்குடி ஆரோன் என்பவர் மூலம் கடற்கரை பகுதிகளில் விற்பனை செய்து வருவதாகவும்,
மேலும், இந்த கஞ்சாவினை இலங்கைக்கு கடத்த இருந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.


இதனையடுத்து, கஞ்சா ஏற்றி வைத்திருந்த சரக்குவாகனங்கள், 5 செல்போன்கள் 25ஆயிரம் ரொக்க பணம் ஆகிவற்றை கைப்பற்றினர்.


பின்னர், சுகுமாறனிடம் நடத்திய விசாரணையில் ஆந்திராவில் இருந்து போலியான நம்பர் பிளேட்டை பயன்படுத்தி கஞ்சா ஏற்றி வந்த வாகனத்தை கோச்சடை பகுதியில் பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளதாக கூறியதையடுத்து அந்த சரக்கு வாகனத்தையும் அதில் இருந்த 50 கிலோ கஞ்சாவினையும் கைப்பற்றினர்.


இந்த கஞ்சா வழக்கில் 6 பேர் கைது செய்யப்பட்டதோடு, 2090 கிலோ கஞ்சாவும், கஞ்சா விற்பனைக்கு பயன்படுத்திய 2 சரக்கு வாகனங்கள், ஒரு கார், 8 செல்போன்கள் மற்றும் கஞ்சா விற்ற பணம் ரூ-25ஆயிரம் ரூபாய் ஆகியவையும் கைப்பற்றப்பட்டன.


மேலும், இவ்வழக்கில் தலைமறைவாக உள்ள முக்கிய குற்றவாளிகளான JK என்ற ஜெயக்குமார் மற்றும் ஆரோன் ஆகிய இருவரையும் விரைவில் கைது செய்வோம் என்று துணை ஆணையர் அரவிந்த் கூறினார்.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here