பேடிஎம் நிறுவனத்தின் புதிய தலைவராக அமித் நய்யார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கிவரும் பேடிஎம் நிறுவனம், மின்னணு பணப் பரிவர்த்தனை சேவை வழங்கும் முன்னணி நிறுவனங்களுள் முக்கிய இடம் வகித்து வருகிறது. இந்த நிலையில், இந்நிறுவனத்தின் புதிய தலைவராக அமித் நய்யார் என்பவரை அந்நிறுவனம் நியமித்துள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல வங்கி நிறுவனமான கோல்டுமேன் சாக்ஸில் நிர்வாக அதிகாரியாக பணியாற்றிய அனுபவமுள்ள இவர் ஐசிஐசிஐ செக்யூரிட்டீஸ் மற்றும் பேங்க் ஆஃப் அமெரிக்கா உள்ளிட்ட நிறுவனங்களிலும் பணியாற்றியுள்ளார்.
புதிய தலைவர் நியமனம் குறித்து தெரிவித்துள்ள பேடிஎம் நிறுவனர் விஜய் சேகர் சர்மா,
தங்களது நிறுவனத்தின் சேவைகளை விரிவுபடுத்தவுள்ளதாகவும் அதற்கு அமித் நய்யாரின் அனுபவம் உதவிகரமாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
அதன்படி பேடிஎம் நிறுவனத்தின் கடன், காப்பீடு மற்றும் நிதி மேலாண்மை உள்ளிட்ட பொறுப்புகளையும் அமித் நய்யார் கவனிப்பார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.














