விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகேயுள்ள கல்குறிச்சி பகுதியைச் சேர்ந்தவர் முருகன் (50). இவர் திருவிழா மற்றும் சுபநிகழ்ச்சிகளுக்கு தேவையான அலங்கார மின் விளக்குகள், எலக்ட்ரிக்கல் சாதனங்கள், ஜெனரேட்டர் ஆகியவற்றை வாடகைக்கு விடும் தொழில் செய்து வருகிறார். விளாத்திகுளம் பகுதியில் நடைபெறும் திருவிழா நிகழ்ச்சிக்கு தேவையான பொருட்களை ஏற்றிக்கொண்டு, மதுரை – தூத்துக்குடி நான்கு வழிச்சாலையில் சென்று கொண்டிருந்தார்.
அருப்புக்கோட்டை அருகேயுள்ள பந்தல்குடி அன்புமாடல் நகர், சாய்பாபா கோவில் முன்பு சென்று கொண்டிருந்த போது திடீரென்று மினிலாரியின் டயர் வெடித்தது. இதனால் மினிலாரி நிலை தடுமாறி சாலையின் குறுக்கே கவிழ்ந்தது. இந்த விபத்தில் லாரியில் இருந்த பொருட்கள் சாலையில் சிதறி விழுந்தன. விபத்து காரணமாக அந்த வழியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்து தகவலறிந்த பந்தல்குடி காவல்நிலைய போலீசார் விரைந்து சென்று, விபத்தில் கவிழ்ந்துகிடந்த மினிலாரியை மீட்டு, போக்குவரத்தை சரி செய்தனர்.
நல்லவேளையாக இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படாமல் உயிர் தப்பினர். விபத்து குறித்து பந்தல்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.














