நெல்லை மாநகராட்சி 3ஆவது வார்டில் கூட்டணி தலைமை கட்சியான திமுக வேட்பாளரை எதிர்த்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கட்சியின் சார்பில் வக்கீல் வி.சி. கார்த்திக் போட்டியிடுகிறார்.
பல்வேறு இடங்களில் திமுக காங்கிரஸ் இடையே போட்டி நிலவுகிறது என்றாலும், கூட்டணி தர்மத்தை கடைப்பிடிப்பதில் மிகுந்த நிதானமாக செயல்படும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளர் கூட்டணித் தலைமை கட்சி வேட்பாளரை எதிர்த்து களம் இறங்கி இருப்பதால் அது குறித்து அவரிடம் கருத்து கேட்டோம்.
‘திமுக தலைமை மீது எனக்கு எந்த கோபமும் கிடையாது. மாவட்ட திமுக நிர்வாகம்தான் உரிய சீட் ஒதுக்கவில்லை. 14 ஆவது வார்டை ஒதுக்கினார்கள். பட்டியலினத்தவர் மிகுதியாக உள்ள இந்த மூன்றாவது வார்டை ஒதுக்க மறுத்தார்கள்.
கடந்த முறை நாலாவது வார்டு ஆக இருந்தபோது யாதவர்கள் அதிகம் இருந்தனர். ஆனால் இப்போதைய வரையறைப்படி 2500 தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தவர்கள் வசிக்கின்றனர். எனவே, இதை ரிசர்வ் வார்டாக அறிவித்திருக்க வேண்டும்,,அல்லது, கூட்டணியில் எங்கள் கட்சிக்கு ஒதுக்கி இருக்க வேண்டும்.
அதைச் செய்யாததால், சுமார் 70 ஆண்டு காலம் மறுக்கப்பட்ட உரிமைக்காக நான் போட்டியிடுகிறேன் . அதே நேரம், வக்கீல் என்பதாலும், மக்களுக்காக போராடுவதாலும் அனைத்து சமூக மக்களும் என்னை ஆதரிக்கிறார்கள்’என்றார்.









