நெல்லை மாவட்டம் பணகுடி அருகே ரோஸ்மியாபுரம் பகுதியில் அமைந்துள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி வனப் பகுதி பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது . இங்கு புலிகள், யானைகள், செந்நாய்கள் மற்றும் கரடி போன்ற வனவிலங்குகள் வசித்து வருகின்றன.
இந்த வனப் பகுதியில் சட்டவிரோதமாக மண் கடத்தப்படுவதாக போலீசாருக்கு நேற்று ரோஸ்மியாபுரம் கிராம மக்கள் தகவல் தெரிவித்தனர். தகவலின் அடிப்படையில் பணகுடி போலீசார் விரைந்து சென்று 3 லாரிகளை பறிமுதல் செய்து லாரி ஓட்டுனரிடம் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் லாரி ஓட்டுனர்கள் இரட்டை ரயில் பாதை பணிகளுக்காக. மண் எடுக்கப்படுவதாகவும் மண் எடுப்பதற்கான உரிய பாஸ் தங்களிடம் இருப்பதாகவும் காவலரிடம் தெரிவித்தனர். பின்னர் காவலர்கள் பாசை சோதனை செய்தபோது அது போலியானது என தெரியவந்தது.
இதனிடையே சம்பவ இடத்திலிருந்து 3 லாரி ஓட்டுநர்களும் தப்பி சென்று விட்டதாக கூறுகின்றனர் . விசாரணை வளையத்தில் இருந்த டிரைவர்கள் தப்பிய மர்மம் தெரியவில்லை.
எனினும், போலீசார் 3 லாரிகளையும் பறிமுதல் செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் 100 ஏக்கரில் விவசாயம் செய்வதாக கூறி போலி ஆவணங்கள் மூலம் மணல் கடத்தியதாக தெரியவந்துள்ளது.








