கோவை ஆர்எஸ் புரம் சுண்ட பாளையம் ரோடு பகுதியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் (56). பீளமேடு பகுதியில் உள்ள லாரி நிறுவனத்தில் மேனேஜராக பணிபுரிந்து வருகிறார். இவரது இளையமகள் ரேவதிக்கும் சென்னையைச் சேர்ந்த தர்மராஜ் மகன் மனோஜ் (36) என்பவருக்கும் கடந்த பதினொரு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. மனோஜ் சென்னையில் உள்ள பிரபல ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
2016ஆம் ஆண்டு மனோஜுக்கும் அவரது மனைவி ரேவதிக்கும் இடையே தகராறு ஏற்பட்டு இது குறித்து ரேவதியின் தந்தை பாலகிருஷ்ணன் போலீசில் புகார் அளித்தார். அந்த வழக்கு நிலுவையில் உள்ளது. இந்நிலையில் ரேவதி கடந்த ஓராண்டுக்கு முன்பு பிரசவத்திற்காக கோவை ஆர் எஸ் புரம் பகுதியில் உள்ள தந்தை பாலகிருஷ்ணன் வீட்டிற்கு வந்தார். கொரோனா ஊரடங்கு ஏற்பட்டதால் மனோஜூம் ஆன்லைன் மூலம் வேலை செய்வதற்காக கோவையிலுளள மாமனார் வீட்டில் வந்து தங்கியிருந்தார்.
ஏற்கனவே மனோஜுக்கும் அவரது மாமனார் பாலகிருஷ்ணனுக்கும் குடும்பத் தகராறு இருந்து வந்ததால் மனோஜ் மாமனார் குடும்பத்தின் மீது கடும் கோபத்துடன் இருந்துள்ளார். இதையடுத்து மாமனார் குடும்பத்தை பழிவாங்க திட்டம் தீட்டி, அவரது மாமியார் குளிக்கும் பாத்ரூமில் ரகசிய கேமராவை பொருத்தி உள்ளார்.
பின்னர் அவர் குளிக்கும் பொழுது போட்டோ, வீடியோக்களை எடுத்துள்ளார். பின்னர் அந்த போட்டோக்களை இணையதளத்தில் வெளியிட்டு விடுவேன் என்று மாமனார் பாலகிருஷ்ணன் குடும்பத்தை மனோஜ் மிரட்டியுள்ளார் .இதனால் பாலகிருஷ்ணன் குடும்பத்தார் அதிர்ச்சி அடைந்தனர் .பாலகிருஷ்ணன் ஆர்.எஸ். புரம் போலீஸ் ஸ்டேஷனில் இதுகுறித்து அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசாருக்கு மனோஜ் மாமியாரின் ஆபாச படங்களை மொபைல் போனில் வைத்திருந்தது தெரியவந்தது.
இதையடுத்து மாமியாரின் ஆபாச படங்களை வெளியிட்டு விடுவதாக மிரட்டிய மனோஜ் (36) மற்றும் போட்டோ எடுத்து மிரட்டுவதற்கு தூண்டுதலாக இருந்த அவரது தந்தை தர்மராஜ் ,தாயார் கோமதி, சகோதரி சுகன்யா மற்றும் கார்த்திக் ஆகிய 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.













