குலம் காக்கும் தெய்வங்கள்

0
2028

‘குருவை மறந்தாலும் குலதெய்வத்தை மறவாதே’ என்பார்கள். ஆனால், தமிழர்கள் குல தெய்வங்களின் அடையாளமே இன்று மறந்துபோனது. குடும்ப விருத்திக்கு குல தெய்வத்தை வணங்கவேண்டியது நியதியாகவே கருதுவதால், ஊரை விட்டு நகருக்கு இடம்பெயர்ந்த பலரும்  தங்கள் குல தெய்வம் இருக்குமிடத்தை அறிய பிரசன்னம் பார்த்துக்கொண்டிருப்பதை அடிக்கடி காணமுடிகிறது.  சங்க இலக்கியத்தில் தமிழரின் சமயமும் தெய்வங்களும் குறிப்பிடப்பட்டுள்ளன.

குறிஞ்சிக்கு முருகன்,  முல்லைக்கு திருமால், மருதத்துக்கு இந்திரன், நெய்தலுக்கு வருணன், பாலைக்கு கொற்றவை தெய்வங்களாவர். இவை தவிர, இல்லுறை தெய்வம் என்னும் குல தெய்வங்கள், காடு, வயல், ஊரைக் காக்கும் காவல் தெய்வங்களும் உண்டு. மோகினி என்னும்  அணங்கு பறியும் சில இடங்களில் சொல்லப்படுகிறது,

இயற்கையை இறைவனாக கருதிய பழங்கால தமிழர்கள்,  மரம், ஆறு, கடல் போன்றவற்றையே இயற்கை இருப்பிடங்களையே அவனுறையும் ஆலயங்களாக கருதினர். கடம்பமர் நெடுவேளாக முருகனும் (பெரும்பாணாற்றுப்படை – 75) , ஆலமர் செல்வனாக சிவனும், வருணிக்கப்பட்டனர்.  ‘பெருங்காட்டுக் கொற்றி’ (கலித்தொகை) என்றும், “கானமர் செல்வி’ (அகம் 348) என்றும் கொற்றவையை புலவர்கள் குறிப்பிடுகிறார்கள்.

காடும் காவும், கவின்பெறு துருத்தியும்,

யாறும் குளனும், வேறுபல் வைப்பும்,

சதுக்கமும் சந்தியும், புதுப்பூங் கடம்பும்,

மன்றமும் பொதியிலும், கந்துடை

நிலையினும் முருகன் இருந்ததாக திருமுருகாற்றுப்படை 223 – 226 கூறுகிறது.

இதன் மூலம் இயற்கையை வணங்கிய ஆதிக்குடியான தமிழர்கள், அதையடுத்து ஐவகை நிலங்களின் தலைவர்களை வணங்கியதை அறியமுடிகிறது. ஆரியர் வருகைக்கு முன்புவரை நமது தெய்வங்களில் பெருந்தெய்வம், சிறுதெய்வம் என்ற பேதமில்லை.  முருகனும் வருணனும், இந்திரனும், திருமாலும் பெருந்தெய்வங்களுக்குரிய இடத்தை வகித்தபோதும், சிறு தெய்வங்களுக்குரிய பொங்கல், பலி, காவடி, குரவை, சாமியாட்டமும் கண்டுவந்தனர்.

அசைக்கமுடியாத இந்த இயற்கை மற்றும் மரபு சார்ந்த இறைவணக்கத்தை தவிர்க்கமுடியாமல்தான் பிற்காலத்தில் வேரூன்றிய பெருஞ்சமயங்கள் எல்லாம்  தமிழகத்தில் மட்டும் மூர்த்தி, ஸ்தலம், தீர்த்தம், விருட்சம் என்கிற நான்கு அம்சங்களைக்கொண்டதாய் தம்மை நிறுவிக்கொண்டன.ஐவகை நிலக் கடவுளரில் கொற்றவையும் முருகனும் கானுறை தெய்வங்கள். கொற்றவையே பிற்பாடு சக்தியாய், காளியாய் உருவெடுத்தாள். இவளை தவிர கன்னிமார் எழுவரும் கடவுள் அம்சமாய் கருதப்பட்டனர். இவர்களுக்கிடையே கற்பு, வீரம், காவலில் மேம்மட்ட மானுடப்பிறவிகள் தெய்வ நிலைக்கு உயர்த்தபப்ட்டனர். சுடலை, இசக்கி, கருப்பன் ஆகியோர் இத்தகையவர்கள்.குடும்பத்துக்கு ஒரு தலைவர், குலத்துக்கொரு தலைவர், இனத்துக்கொரு தலைவர் என பண்டைய மக்களின் பரம்பரையில் தலைவர்களுக்கு தனியிடம் உண்டு. தலைவரில்லாத கூட்டம் தலையில்லாத முண்டமாக கருதப்பட்டது. அவ்வாறு தலையாக, தலைவர்களாக இருந்தவர்களே ஐயனார்களாக, முனியசாமிகளாக ஆனார்கள்.

நமது குல தெய்வங்களுக்கும் கூரை கொண்ட கூடம் பிடிக்காது. பொன்னால் வேய்ந்த மாடமும் பிடிக்காது. ஆறு, ஏரி, குளங்கள், அடர்காடுகளில் இருந்து தான் ஐயனார்கள், கருப்பர்கள் மட்டுமின்றி  பிடாரி, காளியும் ஊர் காத்துவந்தனர்.

கிராமங்களில் சிறப்பாக வாழ்ந்து  இறப்போரை தெய்வமாக்கிவிடுவார்கள். சங்ககாலத்தில் வீரர்கள், பத்தினிகளின் நினைவாக நடுகல் நட்டார்கள். அந்த நடுகல்லில் வீரர்களின் உருவத்தையும் அவர்களின் வீர, தீரத்தையும் பொறித்தனர். அவர்கள் மீதான மரியாதையின் தொடர்ச்சியாக வழிபாட்டு முறையும் வந்தது.

இவ்வாறு தெய்வமானவர்கள் குலதெய்வம், ஊர்த்தெய்வம், இனத்தெய்வம் என்று மூன்று பிரிவுகளில் அடங்குவர். குடும்பத்தை காத்து மடிந்த  பெரியவர்களுக்கு  சமாதி கட்டி,  வீட்டில் நிகழும் நற்காரியங்களுக்கு வழிகாட்ட அவர்களுக்கு பொங்கல் வைத்து வணங்குவதுண்டு. இதை குருபூசை என்பர். அதேபோல் கன்னியாக மடிந்தவளும் தெய்வமாவாள். கற்பின் கனலியாக நீடு வாழ்ந்தவளும்  போற்றப்படுவாள். . குடும்ப நன்மைக்காக கொலையுண்டவர்களும், மானம் காக்க தற்கொலை செய்துகொண்டவர்களும் கடவுளர் ஆவது மரபு.

இத்தகைய இல்லுறை தெய்வங்களுக்கு  பிடித்தமான உணவு வகைகளையோ ஆக்கிவைத்து வணங்குவதுண்டு.  குடும்பத்தின் தலைவரே பூசையை முன்னின்று செய்வார். வீட்டில் நடக்கவுள்ள நல்ல காரியங்களுக்கு குடும்ப தெய்வத்திடம் கட்டாயம் அனுமதி வாங்குவார்கள்.

திருமணத்துக்காக இந்த இல்லுறை தெய்வஙக்ளிடம் வேண்டுவதும்,  திருமண நாளில் அவர்களுக்கு சிறப்பு செய்வதும் முற்காலத்திலிருந்து தற்காலம் வரை கடைப்பிடிக்கும் பழக்கம். இதையே,

யாயும் அவனே என்னும் யாமும்

வல்லே வரும, வரைந்த நாள் என

நல் இறை மெல்விரல் கூப்பி

இல் உறை கடவுட்கு ஆக்குதும் பலியே

என அகநானூறு (282: 15 – 18 ) பதிவு செய்கிறது.

குடும்ப தெய்வங்கள் போல்  குலம் தழைப்பதற்காக உதவியவர்கள் குல தெய்வங்களாகின்றனர். கருப்பு, ஐயனார், மதுரை வீரன், பெரியசாமி போன்ற தெய்வங்களை பல்வேறு பிரிவினர்களுக்கும் பொதுவான குலதெய்வங்களாக காணப்படுவதை பார்த்தால் தமிழர்கள் ஒரு காலத்தில் ஒன்றே குலம், ஒருவனே தெய்வமாக வாழ்ந்துள்ளதை உணரமுடிகிறது. தமிழக பொற்கொல்லரின் குலத்தெய்வம் காமாட்சியம்மன்.  நாடார்களுக்கு பத்ர காளியம்மன். கடல் கெழு செல்வியான  குமரி அம்மன் மீனவர்களின் காவல் தெய்வம்.  இவ்வாறு ஒவ்வொரு சமூகத்திற்கும் ஒவ்வொரு தனித்தெய்வ வழிப்பாடு இருந்துள்ளது.

குடும்பத்தில் நடைபெறும் பிறந்த நாள், காதணி, பூப்பு நீராட்டு, திருமண விழாக்களுக்கு முதல் அழைப்பிதழை இவர்கள் முன்பு வைக்கும் பழக்கம் இன்றளவும் இருந்துவருகிறது. வருடத்திற்கு ஒரு முறை சுற்றம் சூழ, சாமிக்கு புதுப் பட்டுடுத்தி, அலங்கரித்து, கடா வெட்டி பொங்கல் வைக்கின்றனர். இதை பொங்கல், கொடை, சிறப்பு என பல பபெயர்களில் வழங்குகிறார்கள்.

இதுதவிர, ஊர் மக்கள் அனைவராலும் ஒருங்கே வணங்கப்படும் ஊர் தெய்வங்களுமுண்டு. ஊர் நன்மைக்காக உயிர் நீத்த மனிதர்களின் நினைவாக எழுந்ததே இந்த வழிபாடு. இத்தெய்வ பூசைக்கு தனியாக பூசாரி நியமிக்கபப்டுகின்றனர். தமிழர்கள் வரலாற்றில் தலைமை தாங்குபவர்கள் பெண்களான தாயர் என்பதால் பெரும்பாலும் அம்மன் தெய்வங்களே ஊர் தெய்வங்களாக ஊர் நடுவே கொலுவீற்றிருப்பர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here