கோவில்பட்டியில் ஓடை ஆக்கிரமிப்பு அகற்றம்

0
764

கோவில்பட்டி செவல்குளம் நீரோடையில் செண்பகவல்லி அம்மன் கோயில் பயன்பாட்டில் 106 கடைகளும், தனியார் ஆக்கிரமிப்பில் 25 கடைகளும் கட்டப்பட்டு இருந்தன. இதில் கடை உரிமையாளர்கள் ஓடையில் கான்கிரீட் தூண்கள் எழுப்பி தங்களது வசதிக்கு தக்கவாறு கடைகளை மாற்றி அமைத்துக் கொண்டதால், மழைக்காலங்களில் மழைநீர் செல்வதில் சிரமம் ஏற்பட்டது. இந்தக் கடைகளுக்கு தேங்கும் கழிவு நீரும் மழைக்காலத்தில் வரும் தண்ணீரும் சேர்ந்து சாலையில் பெருக்கெடுத்து ஓடியதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.

நீர்வரத்து ஓடையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை கடந்த 2010ஆம் ஆண்டு உத்தரவிட்டிருந்தது. ஆனாலும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாமல் கோவில்பட்டி நீர்வரத்து ஓடை ஆக்கிரமிப்பு மீட்புக் குழுவினர் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள கடைகளில் கோவில் பயன்பாட்டிலுள்ள 106 கடைகளும், தனியார் ஏக்கருக்கு உள்ள 25 கடைகளில் 12 கடைகளும் நீதி மன்றத்தில் தடை ஆணை பெற்றுள்ளனர்.

இதையடுத்து ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடந்தது. கோட்டாட்சியர் விஜயா, வட்டாட்சியர் மணிகண்டன் மற்றும் வருவாய் துறை தீயணைப்பு துறை மின்வாரிய துறை நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் முன்னிலையில் நீதிமன்றத்தில் தடை உத்தரவு பெறாத 13 கடைகளும் இரண்டு ஜேசிபி இயந்திரங்கள் மூலம் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.

கோவில்பட்டி டிஎஸ்பி ஜெபராஜ் தலைமையில் காவல் ஆய்வாளர்கள் சுதேசன், ஐயப்பன், ஆவுடையப்பன், பத்மாவதி மற்றும் உதவி ஆய்வாளர்கள் போலீசார் என 500க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.
தற்போது கோவில்பட்டியில் சாலை விரிவாக்க பணி நடந்து வருவதால் மீதமுள்ள கடைகளும் இடித்து அப்புறப்படுத்த பட்டால் மட்டுமே சாலைப் பணிகளை விரைவாக முடிக்க முடியும் என்ற நிலையில், விரைவில் நீதிமன்றத்தில் ஆணை பெற்று நீர்வரத்து ஓடையில் உள்ள அனைத்து ஆக்கிரமிப்புகளும் அகற்றப்படும் என வருவாய்த் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here