அரசியலில் அண்ணன் தம்பி வெவ்வேறு கட்சிகளில் இருப்பது சகஜம். தேர்தல் கால கட்டங்களில் அது பகையாகவும் முடிவது வழக்கம். ஆனாலும் நாளாவட்டத்தில் பகையை மறந்து இணைந்து கொள்வது இயல்பு.
இப்படித்தான் ஸ்ரீவைகுண்டத்தில் முன்னாள் பேரூராட்சித் தலைவர் அருணாசலமும் அவரது தம்பி சண்முகசுந்தரமும் கடந்த உள்ளாட்சித் தேர்தலில் மோதிக்கொண்டனர். இதுவரை எந்த பிரச்சனையும் இல்லாத நிலையில், சண்முக சுந்தரத்தின் மகன் பிரேம் குமார் தனது தாய், தந்தையுடன் சேர்ந்து தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும், வீட்டுக்கு வந்து கதவை அரிவாளால் வெட்டி வெளியே வரும்படி அழைத்ததாகவும் அருணாசலம் மகன் பிச்சாண்டி ஸ்ரீவைகுண்டம் போலீசில் புகார் செய்துள்ளார். அதற்கு ஆதாரமாக தனது வீட்டு கதவில் அரிவாள் தடம் பதிந்த படத்தையும் கொடுத்துள்ளார்.
பிரச்சினை ஓரளவு தணிந்த நிலையில், சண்முக சுந்தரத்தின் சம்மந்தகாரரான சுப்பிரமணியம் பிரச்சினையில் தலையிட்டு கட்டபஞ்சாயத்து செய்ய, இப்போது இரு பக்கமும் ஆக்ரோஷமான நிலை காணப்படுகிறது. சுப்பிரமணியம் ஓரளவு செல்வாக்கு உள்ள நபர் என்பதாலும், ஏற்கனவே அவர் மீது கொலை வழக்கு இருப்பதாலும் அச்சம் ஏற்பட்டுள்ளது.
எனவே, ஸ்ரீவைகுண்டம் போலீசார் உடனடியாக பிரச்சினையில் தலையிட்டு சகோதரச் சண்டையை நிறுத்தி வைத்தால் ஒழிய, வெட்டுக்குத்து பெயர் போன ஊர் என்பது போன்ற தோற்றம் மறுபடியும் ஏற்பட வாய்ப்புள்ளதாக அப்பகுதியினர் கருத்து தெரிவிக்கின்றனர்.








