கோவை கருமத்தம்பட்டி அடுத்த சோமனூர் பகுதியில் வசித்து வருபவர் டாக்டர் தீபக் சாகர் (33). இவருக்கு சொந்தமாக தமிழ்செல்வி ஹாஸ்பிடல் என்ற பெயரில் அதே பகுதியில் மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனை அருகில் ஆறுமுகம் என்பவரின் பழைய கட்டடம் ஒன்று இருந்தது. அதை ஆறுமுகம் இடித்துவிட்டு புதிய கட்டுமானங்களை கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் தொடங்கினார். அப்போது தீபக் சாகரின் மருத்துவமனை ஆம்புலன்ஸ் செல்லும் வழியிலேயே கட்டுமான பொருட்களை ஆறுமுகம் வைத்துள்ளார்.
இடையூறு இல்லாமல் கட்டுமான பணிகளை மேற்கொள்ளுமாறு மருத்துவமனை நிர்வாகத்தின் சார்பில் ஆறுமுகத்திடம் கூறினர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இந்நிலையில் மீண்டும் ஆம்புலன்ஸ் செல்லும் பாதையில் கட்டுமான பொருட்களை வைத்ததால் டாக்டர் தீபக் சாகர் கேள்வி எழுப்பியுள்ளார். இதில் ஆத்திரமடைந்த ஆறுமுகம், அவரது மனைவி லதா , மகள் ஸ்னேகா ஆகியோர் டாக்டர் தீபக் சாகரிடம் தகாத வார்த்தைகள் பேசி தகராறில் ஈடுபட்டனர். தகராறு முற்றிய நிலையில் மரக்கட்டையால் டாக்டர் தீபக் சாகரை தாக்கத் தொடங்கினர். அதில் தீபக் சாகருக்கு தலை, கை கால்களில் காயம் ஏற்பட்டது.
இதைப்பார்த்த மருத்துவமனையில் இருந்த நோயாளிகள் அலறி அடித்து ஓடினர். மருத்துவமனை ஊழியர்கள் டாக்டர் தீபக் சாகரை மீட்டு சோமனூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.தொடர்ந்து டாக்டர் தீபக் சாகர் கருமத்தம்பட்டி போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.












