விருதுநகர் ஆயுதப்படை பிரிவில் தலைமை காவலராக பணிபுரிந்து வந்தவர் ராஜீவ்பாண்டி (38). இவர் தனது மனைவி நிர்மலாதேவி மற்றும் 2 குழந்தைகளுடன், ஆயுதப்படை காவலர் குடியிருப்பில் வசித்து வந்தார். இவருக்கும் இவரது மனைவிக்கும் நீண்ட நாட்களாக குடும்பத் தகராறு இருந்து வந்தது. இது குறித்து நிர்மலாதேவி பரமக்குடியில் வசித்துவரும் தனது பெற்றோரிடம் கூறியுள்ளார்.
நேற்று நிர்மலாதேவியின் பெற்றோர் விருதுநகருக்கு வந்து ராஜீவ்பாண்டி மீது புகார் கொடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு சென்றனர். அப்போது ராஜீவ்பாண்டி அவர்களை வழிமறித்து தகராறில் ஈடுபட்டார். அவர் மீது சூலக்கரை காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. போலீசார், ராஜீவ்பாண்டியை கைது செய்து சொந்த ஜாமீனில் விடுவித்தனர். இதனால் மன உளைச்சலில் இருந்தவர் வீட்டிலிருந்த விஷத்தை குடித்துவிட்டு ஆயுதப்படை மைதானத்திற்கு வந்து மயங்கி விழுந்தார்.
அங்கிருந்த போலீசார் அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். செல்லும் வழியில் ராஜீவ்பாண்டி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து சூலக்கரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.











