கோவை சிங்காநல்லூர் அடுத்த நீலிகோணம்பாளையம் பகுதியைச் சேர்ந்த மன்னார்சாமி என்பவரின் மகன் கௌதம் (39). இவர் சொந்தமாக மருந்து கம்பெனி நடத்தி வருகிறார். கடந்த ஆண்டு கொரோனா காரணமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து கௌதம் ஆன்மீக பணிகளில் ஈடுபட்டார். இதற்காக விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சதுரகிரி மலைக்கு அடிக்கடி சென்று வந்தார்.
அங்கே சென்ற பொழுது சாமியார் ராஜேந்திரன் என்கிற அன்பே சிவம் என்ற சாமியாருடன் தொடர்பு ஏற்பட்டது. ஒவ்வொரு முறையும் சென்று வரும்போது அவரை சந்தித்து மூலிகைகள் மற்றும் மருந்துகள் குறித்து விளக்கம் கேட்பது கௌதமின் வழக்கம்.
சில நேரங்களில் சாமியார் ராஜேந்திரன் ஒரு சில மூலிகை மருந்துகளை கௌதமுக்கு கொடுத்து அனுப்பியுள்ளார். அதை கௌதம் தனது நண்பர்கள் உறவினர்களுக்கு கொடுத்ததில் நோய்கள் குணமாகி உள்ளது. இதை அடுத்து ஒரு முறை சதுரகிரி சென்ற பொழுது கௌதம் தனது செல்போன் எண்ணை கொடுத்து
கோயம்புத்தூர் வந்தால் தனது வீட்டிற்கு வரும்படி சாமியார் ராஜேந்திரனுக்கு அழைப்பு விடுத்தார் .
இதையடுத்து செப்டம்பர் மாதம் சாமியார் ராஜேந்திரன் என்கிற அன்பே சிவம் கோவைக்கு வந்து கௌதமை சந்தித்தார். தொடர்ந்து கௌதம் மூலிகை மருந்துகள் மற்றும் எண்ணெய்களை தயாரித்து கோவையிலேயே விற்பனை செய்யலாம் என்று சாமியார் ராஜேந்திரன் இடம் கூறியுள்ளார். இதையடுத்து சாமியார் ராஜேந்திரன் கௌதமின் வீட்டில் தங்கத் தொடஙகினார்.
கௌதம் அவருக்கு தேவையான உணவு, தங்குமிடம் மற்றும் செலவுக்கு பணம் என கொடுத்து வந்தார். இந்நிலையில் கௌதம் தனது வீட்டின் ஒரு பகுதியை வேறு ஒருவருக்கு பத்து லட்ச ரூபாய்க்கு லீசுக்கு கொடுத்தார்.வங்கியில் இருந்த அந்த பணத்தில் 3 லட்ச ரூபாயை எடுத்துக்கொண்டு நேற்றுமுன்தினம் இரவு வீட்டிற்கு வந்தார்
.தொடர்ந்து சாமியார் ராஜேந்திரனிடம் பேசிவிட்டு பணத்தை வீட்டின் முன் அறையில் உள்ள டிவி ஸ்டாண்டில் வைத்து விட்டு தூங்கச் சென்றார். மீண்டும் நேற்று காலை எழுந்து பார்த்தபோது சாமியார் ராஜேந்திரனை காணவில்லை .மேலும் சாமியார் ராஜேந்திரனின் உடைகள் மற்றும் திருவோடு உள்ளிட்டவை வீட்டில் இருந்தது. வீட்டில் வைக்கப்பட்டிருந்த பணம் மூன்று லட்ச ரூபாயும் திருடு போயிருந்தது.
இதை அடுத்து கௌதம் சாமியார் ராஜேந்திரனை சிங்காநல்லூர் பேருந்து நிலையம் உள்ளிட்ட பல பகுதிகளில் சென்று தேடினார். பின்னர் அவரது செல்போனுக்கு தொடர்பு கொண்டார். சாமியார் ராஜேந்திரனின் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.
இதுகுறித்து கௌதம் சிங்காநல்லூர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார், சாமியார் ராஜேந்திரன் என்கிற அன்பே சிவத்தை தேடி வருகின்றனர்.
சாhமியார் ராஜேந்திரன் 15 ஆண்டுகளுக்கு முன்பு குடும்பத்தை பிரிந்து வசித்து வந்ததாகவும் அவரது குடும்பத்தார் சென்னையில் இருப்பதாகவும் போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அங்கு போய் தேட போலீசார் ஆயத்தமாகி உள்ளனர்.













