கோவை உக்கடம் கோட்டைமேடு அடுத்த பெருமாள் கோவில் வீதி பகுதியில் வசித்து வருபவர் மகுடீஸ்வரன். பலகார மாஸ்டராக இவர் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். மூத்த மகள் பொன் தாரணி (17). கோவை ஆர். எஸ். புரம் பகுதியில் உள்ள சின்மயா பள்ளியில் பிளஸ் டூ படித்து வந்தார். கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆன்லைன் மூலம் மட்டுமே பெரும்பாலான வகுப்புகள் நடைபெற்று வந்தது. ஆன்லைன் மதத்திற்காக பெற்றோர்கள் செல்போன் வாங்கி கொடுத்துள்ளனர்.
செல்போன் மூலம் பொன் தாரணி வகுப்புகளை கவனித்து வந்தார். அப்போது இயற்பியல் ஆசிரியர் வகுப்பு நேரம் போக மற்ற நேரங்களில் செல்போன் மூலம் பேசி வந்துள்ளார். மேலும் பொன் தாரணியிடம் நீ அழகாக இருக்கிறாய் என்று கூறி பேசியுள்ளார். இதையடுத்து இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. மேலும் தற்போது வகுப்புகள் பள்ளியில் நடைபெற்ற வரும் சூழலில் பொன் தாரணி பள்ளிக்கு சென்று வந்துள்ளார்.
அப்போது இயற்பியல் ஆசிரியர் பொன் தாரணியிடம் தவறாக நடக்க முயற்சித்ததாக கூறப்படுகிறது. இதனால் கடந்த சில நாட்களாக பொன் தாரணி மனமுடைந்த நிலையில் இருந்து வந்துள்ளார். இதுபற்றி தனது தோழிகளிடம் அழுது புலம்பியுள்ளார் .
இந்த தகவல் பொன் தாரணியின் பெற்றோருக்கு தெரியவந்தது. இதையடுத்து அந்தப் பள்ளியிலிருந்து மாற்றுச் சான்றிதழை வாங்கிக்கொண்டு ஆர்.எஸ். புரம் பகுதியில் உள்ள வேறு ஒரு பள்ளியில் சேர்ப்பதற்காக ஏற்பாடு செய்து வந்தனர். இந்நிலையில் மாணவி பொன் தாரணி கடிதம் எழுதி வைத்துவிட்டு தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுபற்றி தகவல் அறிந்த உக்கடம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து மாணவியின் உறவினர்கள் கூறும்போது பள்ளி ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்த காரணமாக பள்ளியிலிருந்து வேறு பள்ளியில் மாணவியை சேர்க்க ஏற்பாடு செய்துவந்த நிலையில் மாணவி தூக்கு போட்ட சம்பவம் நடைபெற்றுள்ளது. எனவே போலீசார் உரிய விசாரணை நடத்தி பள்ளி ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.











