கோவை உக்கடம் எஸ் காலனி பகுதியை சேர்ந்த ரங்கசாமி மகன் muthதான் என்ற செல்வராஜ் செல்வராஜ் (40). கறிக்கடையில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். இவரது அண்ணன் சுப்பிரமணி பிரியாணி மாஸ்டர் ஆக பணிபுரிந்து வருகிறார். இருவருக்கும் திருமணமாகவில்லை. செல்வராஜுக்கு குடிப்பழக்கம் இருந்து வந்தது.
இந்நிலையில் நேற்று மாலை சுப்பிரமணி தனது அக்கா சரோஜினியை செல்போன் மூலம் அழைத்து செல்வராஜ் பாத்ரூமில் வழுக்கி விழுந்து விட்டதாக கூறியிருக்கிறார். இதையடுத்து சரோஜினி தனது மகள் ரேவதியுடன் சிங்காநல்லூரிலிருந்து வந்து பார்த்த பொழுது செல்வராஜ் இடது கண்ணில் காயத்துடன் காதில் ரத்தம் வழிந்த நிலையில் கீழே கிடந்தார். மேலும் கழுத்தில் காயம் இருந்தது.
இதையடுத்து சரோஜினி சுப்பிரமணியத்திடம் கேள்வி எழுப்பியுள்ளார்.அப்போது சுப்பிரமணி, தம்பி செல்வராஜ் தினமும் குடித்துவிட்டு தன்னிடம் தகராறு செய்து வந்ததாகவும் அவருடைய தொல்லை பொறுக்க முடியாமல் கழுத்தை நைலான் கயிற்றால் இறுக்கி கொலை செய்து விட்டதாகவும் கூறியிருக்கிறார் .
இதை தொடர்ந்து சரோஜினி உக்கடம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து முத்தான் என்கிற செல்வராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உக்கடம் பகுதியில் பதுங்கியிருந்த சுப்பிரமணியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












