போலி ஆவணம் மூலம் கடன் மோசடி: வங்கி ஊழியர்கள் உட்பட 8 பேர் கைது

0
505

போலி ஆவணங்களை பயன்படுத்தி வங்கிகளில் கடன் பெற்று மோசடி செய்வது தொடர்பான புகார்களை மத்திய குற்றப்பிரிவில் உள்ள வங்கி மோசடி தடுப்பு பிரிவு அதிகாரிகள் பட்டியலிட்டு கைது நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி 5 வங்கிக் கிளைகளில் அதன் கிளை மேலாளர்கள் கொடுத்த புகார்களின் அடிப்படையில் ஒன்பது பேரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். குறிப்பாக கைதான ஒன்பது பேரில் இரண்டு பேர் வங்கி ஊழியர்கள் ஆவர்.

சென்னை இராஜாஜி சாலையில் உள்ள எச்எஸ்பிசி என்ற தனியார் வங்கியின் கிளை மேலாளர் லைசன் என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வங்கி ஊழியர் , கடன் வாங்கிய நபர் ஆகிய 2 பேரை கைது செய்துள்ளனர். குறிப்பாக ஐ வி சப்போர்ட் என்ற தனியார் நிறுவனத்தில் உள்ள மனிதவள மேம்பாட்டு அதிகாரி பிரித்திவிராஜ் என்பவருடன் கூட்டாக சேர்ந்து வங்கி ஊழியர் நஜிமுதீன் , போலி ஆவணங்கள் மூலம் ,போலி நபர்களின் பெயரில் நாற்பத்தி நான்கு வங்கிக் கணக்குகளை துவங்கியுள்ளார். அதில் 15 பேருக்கு தனிநபர் கடன் அளிக்கப்பட்டதாக மோசடி செய்துள்ளார். சுமார் ஒரு கோடியே ஐம்பத்தி ஒரு லட்சத்து 77 ஆயிரம் ரூபாய் மோசடி செய்தது விசாரணையில் உறுதிப்படுத்தப்பட்டது. இதையடுத்து நஜுமுதீன் மற்றும் பிரித்திவிராஜ் இருவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதேபோன்று ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் உதவி பொது மேலாளர் முருகன் என்பவர் கொடுத்த புகாரில் மேடவாக்கம் ஸ்டேட் பேங்க் ஆப் வங்கியின் கிளை மேலாளர் பாலாஜி என்பவரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். சியாமளா தேவி என்ற பெண்ணுக்கு போலி ஆவணங்கள் மூலம் வீட்டு கடன் வாங்கி கொடுத்த விவகாரத்தில் மோசடி செய்ததாக பாலாஜியை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். போலி ஆவணங்கள் மூலம் வீட்டுக் கடன் வாங்கி மோசடி செய்த விவகாரத்தில், கீழ்ப்பாக்கம் இந்தியன் வங்கி , நுங்கம்பாக்கம் கரூர் வைசியா வங்கி, விருகம்பாக்கம் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கி கிளை மேலாளர்கள் கொடுத்த புகார்களின் அடிப்படையில் , தனித்தனியாக 3 வழக்குப்பதிவு செய்து ஆறு பேரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.

குறிப்பாக கீழ்ப்பாக்கம் இந்தியன் வங்கி கிளையில் வீட்டுக் கடன் மற்றும் மாடன் ரைஸ் மில் வாங்குவதற்கு எனக் கூறி போலி ஆவணங்கள் மூலம் மோசடி செய்த திருவள்ளூரை சேர்ந்த முத்துவேல் என்பவரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். நுங்கம்பாக்கம் கரூர் வைசியா வங்கியில் போலி ஆவணங்களை பயன்படுத்தி வீட்டுக் கடன் வாங்கிய விவகாரத்தில், தனியார் நிறுவன பெண் உரிமையாளர் மிராக்கிளின் டோரிஸ், அவரது கணவர் தங்கராஜ், மற்றும் கோவிந்தராஜ் சையது அலி ஆகியோரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

விருகம்பாக்கம் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியில் போலி ஆவணங்களை சமர்ப்பித்து கடன் பெற முயற்சித்ததாக நாடுகளைச் சேர்ந்த முகமது கனி என்பவரை போலீசார் கைது செய்தனர். இந்த மூன்று வங்கியில் மோசடி செய்து கைதான 6 பேரும் சுமார் 4 கோடி அளவில் கடன் பெற்று மோசடி செய்துள்ளனர். இவ்வாறாக ஐந்து வங்கிகளில் போலி ஆவணங்கள் மூலம் கடன் பெற்று மோசடி செய்த இரண்டு வங்கி ஊழியர்கள் ஒரு பெண் உட்பட 9 பேரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here