கோவை வரைட்டி ஹால் ரோடு சிஎம்ச காலனி பகுதியை சேர்ந்த சுந்தரம் என்பவரின் மனைவி செல்வி (45). இவர் கூலி வேலை செய்து வருகிறார். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இவரது குடியிருப்பு பத்திரத்தை வைத்து கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்த மணிமாறன் என்பவரின் மனைவி செல்வியிடம் 75 ஆயிரம் ரூபாய் பணம் கடனாகப் பெற்றிருந்தார். இதற்கு மாதம்தோறும் 10 சதவீத வட்டியாக 7 ஆயிரத்து 500 ரூபாயை கடந்த 3 ஆண்டுகளாக செலுத்திவந்தார்.
இந்நிலையில் அசல் பணத்தைக் கொடுத்து பத்திரத்தை மீட்கலாம் என செல்வியிடம் சென்று பேசினார். அப்போது செல்வி 85 ஆயிரம் ரூபாய் கொடுத்தால் மட்டுமே பத்திரங்களை திருப்பித் தர முடியும் என்று கூறியிருக்கின்றனர். தன்னால் அவ்வளவு கொடுக்க முடியாது என்றும் ஒழுங்காக வட்டி கட்டி இருக்கும்பொழுது கூடுதலாக எதற்காக 10 ஆயிரம் ரூபாய் கொடுக்க வேண்டும் என்று செல்வி கேள்வி எழுப்பினார் .இதை அடுத்து இரு தரப்பினருக்கும் தகராறு ஏற்பட்டது.
தகராறு முற்றிய நிலையில் பணம் கொடுத்த செல்வி மற்றும் வடவள்ளி பகுதியைச் சேர்ந்த மனோகரன் என்பவரின் மகன் ரமேஷ் குமார்( 42) ஆகியோர் பணம் வாங்கிய கூலித்தொழிலாளி செல்வியை மிரட்டியுள்ளனர் .மேலும் தாக்க முயற்சித்தனர்.தொடர்ந்து செல்வி துடியலூர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார்.
புகாரின்பேரில் கந்து வட்டி வசூலித்த செல்வி (43) மற்றும் ரமேஷ்குமார்( 42 )ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.












