உயிரின் உன்னதம் அறியாமல் அற்ப குடிபோதைக்கு அடிமையாகி இளைய தலைமுறை நாளும் பலியாவது தொடர்கிறது.
கோவை சரவணம்பட்டி மாரியம்மன் கோவில் வீதி பகுதியை சேர்ந்தவர் ராஜு. இவரது மனைவி பார்வதி( 65). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். மூத்த மகனுக்கு திருமணமாகி தாயாருடன் குடும்பத்தோடு வசித்து வருகிறார். இரண்டாவது மகன் தினேஷ்(40) சரவணம்பட்டி பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் இன்ஜினியர் ஆக பணிபுரிந்து வந்தார். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரானா ஊரடங்கு காரணமாக வீட்டிலிருந்தபடியே ஆன்லைன் மூலம் வேலை செய்து வந்தார்.
தினேஷுக்கு கடுமையான குடிப்பழக்கம் இருந்து வந்தது. இதையடுத்து அவர் கோவில்பாளையம் பகுதியில் உள்ள ஹெல்பிங் ஹேண்ட் மது மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று வந்தார் .ஆனாலும் அவரால் குடிப்பழக்கத்தை கட்டுப்படுத்த முடியாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று வீட்டில் இருந்த தினேஷ் கைகள் மற்றும் கழுத்தை கத்தியால் அறுத்துக் கொண்டார். இதைப் பார்த்த வீட்டில் இருந்த அவரது தாயார் அதிர்ச்சி அடைந்தார்.
காயமடைந்த மகனை மருத்துவ மனைக்கு அனுமதிப்பதற்காக ஆம்புலன்சை போன் மூலம் அழைத்தார். ஆனால் அதற்குள் வீட்டிற்குள் வேகமாக ஓடிய தினேஷ் வீட்டின் மொட்டை மாடியில் இருந்து கீழே குதித்தார். இதில் தலை மற்றும் உடலில் பலத்த காயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுபற்றி தகவல் அறிந்த சரவணம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.













