குமரி மாவட்டம் புதூர் கிராம மீனவர் ஆரோக்கிய பிரபு (37) கடந்த 3ஆம்தேதி அதிகாலை ஒரு மணிக்கு பைபர் படகில் மீன் பிடிக்க சென்றார். மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது கடலில் தவறி விழுந்தார். அவருடன் சென்ற மீனவர்கள் தண்ணீருக்குள் தேடியும் அவர் கிடைக்கவில்லை.
இதையடுத்து கரைக்கு வந்து தகவல் கூறினர். உடனடியாக ஊரார் அனைவரும் வள்ளங்களில் சென்று தேடினர். 3 நாட்கள் தேடிய பின் நேற்று காலை கரையிலிருந்து 29 கடல் மைல் தூரத்தில் ஓர் உடல் காணப்படுவதாக தேடியவர்களில் சிலர் தகவல் தெரிவித்தனர்.
அதையடுத்து கிராம மீனவர்கள் வள்ளங்களில் சென்று உடலை மீட்டனர். அது ஆரோக்கிய பிரபுவின் உடல்தன என நம்பினர். ஆனாலும், நீரில் கிடந்து உப்பியிருந்ததால் சரியாக அடையாளம் காண முடியவில்லை. உடல் மாறுபாடு தெரிவதாக கூறி உடற்கூராய்வு நடத்த அதிகாரிகள் திட்டமிட்டனர்.
கூராய்வு முடிவில் அது 60 வயது மதிக்கத்தக்க முதியவர் உடல் என மருத்துவர்கள் தகவல் தெரிவித்தனர். இதனால் ஏமாற்றத்துடன் மீண்டும் கடலில் தேடலை தொடர்ந்தனர் புதூர் மீனவர்கள்.
இந்நிலையில் இன்று நாகப்பட்டணம் பகுதி கடலில் 40 வயது மதிக்கத்தக்க சடலம் கிடைத்ததாக கேள்விப்பட்டு, கிளையூர் அரசு மருத்துவமனையில் காவல் அதிகாரிகள் விவரம் விசாரித்தனர். அதுவும் ஆரோக்கிய பிரபுவின் உடல் அல்ல என தெரிந்தது.
இதனால் புதூர் கிராம மக்கள் மிகவும் வேதனையடைந்தனர். 
எனினும், அவர்கள் தொழிலுக்கு செல்லாமல் தொடர்ந்து மாயமான மீனவர் ஆரோக்கியபிரபுவை தேடிவருகின்றனர்.
இதற்கிடையே, பிறக்கும் தருவாயில் ஒரு குழந்தையை வயிற்றில் சுமக்கும் ஆரோக்கியபிரபுவின் மனைவி, ‘எனது கணவர் இறக்கவில்லை. அவர் உயிருடன் திரும்பி வருவார்’ என்று நம்பிக்கையுடன் கூறிவருகிறார்.









