மாணவர்கள் கைகளில் கயிறு அணியலாமாம் அரசு உத்தரவு வாபஸ்

0
613

தமிழக பள்ளி கல்வித்துறை இயக்குனர் அலுவலகம், சமீபத்தில் அனைத்து மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பி இருந்தது. அதில், ‘பயிற்சி ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் தமிழக பள்ளிகளை பார்வையிட்ட போது, ஒரு சில பள்ளிகளில் விளையாட்டு அணி தேர்வு செய்யும் போதும், மதிய உணவு இடைவேளை மற்றும் வகுப்பு நேரங்களிலும், குறிப்பிட்ட பிரிவு மாணவர்கள், அடையாளம் கண்டு ஒன்று கூடிக் கொள்ளும் வகையில், தங்களது கையில் சிவப்பு, மஞ்சள், பச்சை மற்றும் காவி நிற கயிறு கட்டியிருந்துள்ளனர்.

மோதிரம் அணிந்தும், நெற்றியில் திலகமிட்டும், தாழ்ந்த ஜாதி, உயர் ஜாதி என, தங்களின் ஜாதி அடையாளத்தை காட்டியுள்ளனர். இதனால் மாணவர்கள் மத்தியில் மோதல் ஏற்படுகிறது. ஜாதி பாகுபாடுகளை ஏற்படுத்தும் இதுபோன்ற வழக்கங்களுக்கு அனுமதி அளிக்கக்கூடாது; கண்காணித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இச்சுற்றறிக்கையின் மீது நடவடிக்கை எடுத்ததற்கான அறிக்கையை, இணை இயக்குனர்களிடம் சமர்ப்பிக்க வேண்டும்’ என கூறப்பட்டது. இதற்கு இந்து அமைப்புகள் தங்கள் எதிர்ப்புகளை கடுமையாக பதிவு செய்தன.

இந்நிலையில் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் சென்னை, காமராஜர் சாலையில் உள்ள சாரண, சாரணியர் இயக்க தலைமை அலுவலகத்தில், தேசிய கொடியேற்றிய பின் செய்தியாளர்களிடம் கூறியதாவது ஜாதி மற்றும் மதத்தை வெளிப்படுத்தும் வகையில் மாணவர்கள் செயல்படுவதாகவும், அதனை சரி பார்க்க வேண்டும் என ஆதி திராவிடர் நலத்துறை சார்பில், பள்ளி கல்வித்துறை இயக்குனருக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டது.

அந்த சுற்றறிக்கை அப்படியே, மாவட்ட கல்வி இயக்குனர்களுக்கு அனுப்பப்பட்டு விட்டது. இது அரசின் கவனத்திற்கு வரவில்லை. எது நடைமுறையில் இருக்கிறதோ அந்த நடைமுறைகள் பின்பற்ற வேண்டும் என்பது அரசின் கொள்கை. அதனை பின்பற்ற வேண்டும் என வலியுறுத்தியுள்ளோம். பழைய நடைமுறையே தொடரும் வண்ணக்கயிறு கட்டுவது தொடர்பான அரசின் சுற்றறிக்கை தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார். இதனால், மாணவர்கள் தங்கள் கைகளில் கயிறு அணியலாம். இது ஜாதி அடையாளமாக கருதப்படாது என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here