மத்திய உள்துறை தமிழக காவல்துறைக்கு முக்கியமான ஓர் எச்சரிக்கை தகவலை தெரிவித்தது. அதில் இலங்கையில் இருந்து பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த ஒரு பயங்கரவாதி, இலங்கையைச் சேர்ந்த 5 பேர் என மொத்தம் 6 பயங்கரவாதிகள் கடல் வழியாக கள்ளப்படகு மூலம் தமிழகத்தில் ஊடுருவியிருப்பதாகவும், லஷ்கர் – இ-தொய்பா என்ற பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த அவர்கள் கோயம்புத்தூரில் தற்போது பதுங்கியிருப்பதாகவும் அந்த தகவலில் எச்சரிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து தமிழக காவல்துறையின் சட்டம் மற்றும் ஒழுங்கு டிஜிபி ஜே.கே.திரிபாதி, மாநிலம் முழுவதும் உச்சக்கட்ட பாதுகாப்பு அளிக்கும்படியும், அனைத்துப் பகுதிகளிலும் வாகனச் சோதனை, தீவிர கண்காணிப்பு, தீவிர ரோந்துப் பணிகளில் ஈடுபடுமாறும் அனைத்து காவல் ஆணையர்கள், மண்டல ஐ.ஜி.க்கள், சரக டி.ஐ.ஜி.க்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் ஆகியோருக்கு உத்தரவிட்டார்.
இதன் தொடர்ச்சியாக பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், மார்க்கெட்டுகள், கோயில்கள், தேவாலயங்கள், பள்ளிவாசல்கள், வணிக வளாகங்கள், தூதரகங்கள், முக்கியமான அரசு அலுவலங்கள், துறைமுகங்கள், விமான நிலையங்கள், அரசியல் கட்சி அலுவலகங்கள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மிக முக்கியமான இடங்களில் மெட்டல் டிடெக்டர் மூலம் அனைவரும் சோதனை செய்யப்படுகின்றனர்.
இந்தப் பாதுகாப்புப் பணியில் சுமார் 1.12 லட்சம் போலீஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அதிமுக்கியமான இடங்களில் ஆயுதப்படையினர், தமிழ்நாடு சிறப்புக் காவல் படையினர், அதி விரைவுப் படையினர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.














