ஆர்.எஸ்.எஸ் தலைவருக்கு வரவேற்பு – மதுரை மாநகராட்சி உதவி ஆணையரிடம் விளக்கம் கேட்பு

0
974

மதுரையில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக 4நாட்கள் பயணமாக ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன்பகவத் நாளை விமானம் மூலமாக மதுரை வருகிறார். மதுரை சத்யசாய்நகர் பகுதியில் உள்ள சாய்பாபா கோவில் நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறார்.

ஆர்.எஸ்.எஸ்.தலைவரின் வருகையை முன்னிட்டு மதுரை விமானம் நிலையம் முதல் மாநகர் முழுவதிலும் உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தொடர்ந்து பல்வேறு பகுதிகளிலும் கண்காணிப்பு கேமிராக்கள் மூலம் கண்காணிக்கப்படுவதோடு, ஆங்காங்கே வாகன தணிக்கைகளும் நடத்தப்பட்டுவருகிறது. இதேபோல் அவர் தங்கும் விடுதிகளிலும் 4அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மேலும் மதுரை மாநகராட்சி சார்பில் விமான நிலையத்திலிருந்து அவர் கலந்துகொள்ளும் சாய்பாபா கோவில் அமைந்துள்ள சத்யசாய்நகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சாலைகளை சீரமைத்து தூய்மையாக வைக்கவும், தெரு விளக்குகளை பராமரிக்கவும், அவரின் வருகையின் போது சீரமைப்பு பணிகளை மேற்கொள்ளாமல் இருப்பதை கண்காணிக்க வேண்டும் என மாநகராட்சி மண்டல அலுவலர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே ஆர்.எஸ்.எஸ் தலைவர் வருகை குறித்த பணிகள் தொடர்பாக மதுரை மாநகராட்சியின் உத்தரவு குறித்து மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தனது ட்விட்டர் பக்கத்தில் இட்டுள்ள பதிவில் அரசின் எந்த விதிகளின் படி மதுரை மாநகராட்சியின் உதவி ஆணையாளர் இந்த சுற்றரிக்கையை வெளியிட்டுள்ளார் என்பதை மதுரை மாவட்ட நிர்வாகம் உடனடியாக விளக்க வேண்டும் என கேள்வி எழுப்பினார். அவர் மட்டுமின்றி பல்வேறு தரப்பினரும் இது குறித்து விமர்சித்தனர்.

இது குறித்து மதுரை மாநகராட்சி ஆணையர் விளக்கம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

“இஜட் பிளஸ்” பாதுகாப்பில் இருக்கும் பிரமுகர்கள் பயணம் செய்யும் போது அது தொடர்பான விதிகளின் படி பாதுகாப்பு காரணங்களுக்காக வழக்கமாக சில முன்னேற்பாடுகள் செய்யப்படும் அதனடிப்படையில் மட்டுமே விதிமுறைகளின் படியான பணிகள் மட்டும் மேற்கொள்ளப்படுகின்றன. சிறப்புப் பணிகள் எதுவும் மேற்கொள்ள படவில்லை.

வழக்கமான நிர்வாக நடைமுறைகளின் படி உயர் அலுவலர்கள் அனுமதி பெறாமல், தன்னிச்சையாக, தவறுதலாகப் புரிந்துகொள்ளப்படும் வகையில் சுற்றறிக்கை வெளியிட்ட அலுவலரிடம் இது தொடர்பாக விளக்கம் கேட்கப்பட்டுள்ளது’ என அந்த விளக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது ’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here