குலம் காக்கும் தெய்வங்கள் 9

0
1344

அபிதான சிந்தாமணியில் நீலியின் கதை இப்படி போகிறது.

நீலியானவள் முற்பிறப்பில் நவஞ்ஜயென்னும் பார்ப்பனி. தன் கணவனையும் குமாரனையும் ஒருவன் கொலை செய்ததால் பழிக்குப்பழி வாங்க திருவாலங்காட்டில் புரிசைக்கிழாருக்குப் புத்திரியாகப் பிறந்து, அவன் பேயென்று அவளை நீக்க, அலைந்து திரிந்து தரிசன செட்டியாகப் பிறந்திருக்கும் தன் கணவனைக் கண்டு களித்து அவனைப் பலவாறு மயக்கி பழையனூர் வெள்ளாளரிடம் முறையிட்டு, அவர்கள் 70 பேரையும் அவன் உயிர்க்கு பிணையாக இருக்க உடன்படுத்தினள். அவர்கள் அவ்வாறு பிணை இருப்பதாக செட்டிக்குக் கூறி, அவளுடன் இருக்கும்படி உடன்படுத்தினர். இவள் அவனிடம் இருந்த மந்திர வாளை நீங்கச் செய்து அவனுடனிருந்து அவனைக் கொலைபுரிந்து மீண்டும் செட்டியின் தாய் போல வந்து வேளாளர் 69 பேரையும் தீயில் முழுகச் செய்வித்து, மிகுந்த ஒருவன் போயிருந்த கழனியிடம் அவன் மகள் போலச் சென்று நடந்த செய்தி கூறிப் பழி வாங்கினள். வேல மரத்தில் இருந்த அண்ணன் இறந்ததற்கு ஊரார் வெட்டிய வேல மரம் காரணமாதலால் ஊரார் எழுபது பெயரையும் பழிவாங்கினள்.’ என்பது அந்த சருக்கத்தின் சுருக்கம்.

இதையே பின்னாட்களில் பின்வருவதுபோல் விரிவாக சொன்னார்கள்.

அன்றைய காஞ்சி மாநகரில் புவனபதி என்ற அந்தணர் இருந்தார். சிறிது காலம் இல்லறம் நடத்திய அவர், காசிக்கு புனித யாத்திரை சென்று விஸ்வநாதரை வழிபட்டு கொஞ்ச காலம் அங்கேயே தங்கியிருந்தார். அங்கிருந்த சத்தியஞானி என்பவர் புவனபதியை ஒருநாள் வீட்டு விருந்துக்கு அழைத்தார். விருந்துக்கு போன இடத்தில் விருந்து கொடுத்த சத்திய ஞானியின் மகள் நவக்கியானியின் மனதை மயக்கி கல்யாணமும் செய்துகொண்டார். தனக்கு காஞ்சிபுரத்தில் ஒரு குடும்பம் இருப்பதைப் பற்றி மூச்சுகூட விடவில்லை.

சிறிது காலம் கழித்து ஊர் ஞாபகம் வந்ததால் காஞ்சிக்கு புறப்பட்டார் புவனபதி. நவக்கியானி நானும் வருகிறேன் என அடம்பிடிக்க, வேறு வழியில்லாமல் ஒப்புக் கொண்டார். நவக்கியானியின் சகோதரன் சிவக்கியானியும் கூடவே கிளம்பிவிட்டான். சொந்த ஊரை நெருங்கியபோது புவனபதிக்கு உள்ளூர பயம் வந்துவிட்டது.

எனவே, ஊரருகே உள்ள திருவாலங்காட்டில் இரவு தங்க முடிவு செய்தான். குடிப்பதற்கு தண்ணீர் கொண்டுவருமாறு கூறி மைத்துனன் சிவக்கியானியை அனுப்பிவிட்டு, நவக்கியானியின் கழுத்தை நெரித்துக் கொன்றுவிட்டு தனது ஊருக்கு போய்விட்டார். தண்ணீருடன் வந்த அண்ணன், தங்கை இறந்துகிடப்பதைப் பார்த்த வேதனையில் அருகிலிருந்த புளியமரத்தில் தூக்குப்போட்டு தானும் இறந்துவிட்டான். அண்ணன், தங்கை இருவரும் நீலன், நீலி என்ற பேய்களாக அந்த ஆலங்காட்டை சுற்றிவந்தனர்.

அடுத்த பிறவியில் புவனபதி வைசிய குலத்தில் தரிசனன் என்ற பெயரில் பிறந்தான். அவனது ஜாதகத்தைப் பார்த்த ஜோதிடர்கள், ‘இவனைப் பழிவாங்க வட திசையில் ஒரு பேய் காத்துக் கொண்டிருக்கிறது’ என்று எச்சரித்ததோடு, அதனிடமிருந்து தப்பிக்க மந்திரித்த கத்தி ஒன்றையும் கொடுத்தனர். தரிசனனுக்கு உரிய வயது வந்ததும் காஞ்சிபுரத்தில் ஒரு பெண்ணைப் பார்த்து திருமணம் செய்து வைத்தனர். அவர்களுக்கு ஒரு ஆண் குழந்தையும் பிறந்தது.

இதேபோல், நீலனும், நீலியும் திருவாலங்காட்டில் ஒரு தம்பதிக்கு குழந்தைகளாகப் பிறந்து வளர்ந்தனர். குழந்தைகளாக இருந்தபோதே இருவரும் பகலில் தொட்டிலில் படுத்துறங்குவதும், இரவில் தங்களது பேய்த்தன்மைக்கேற்ப ஆடு, மாடுகளை கொன்று ரத்தத்தைக் குடிப்பதுமாக இருந்தார்கள். ஆடு, மாடுகள் மர்மமாக இறப்பதைக் கண்ட ஊர்காரர்கள் மறைந்திருந்து பார்த்து இந்த ரகசியத்தை அறிந்துவிட்டனர்.

இதையடுத்து அச்சமடைந்த பெற்றோர், அவற்றை தொட்டிலோடு கொண்டுபோய் ஒரு வேல மரத்தில் கட்டினார்கள். பின்னர்
நீலன் அந்த வேல மரத்திலேயே தங்கியிருக்க, நீலி திருச்செங்கோடு சென்றாள். இந்நிலையில் அருகில் பழையனூரில் உள்ள வேளாளர்கள் கலப்பை செய்ய மரம் தேவைப்பட்டதால், நீலன் இருந்த வேல மரத்தை வெட்டிக் கொண்டு போய்விட்டார்கள். அந்த ஆத்திரத்தில் நீலன் அவ்வழியாக வந்த திருவாலங்காட்டு கோவில் குருக்களை அடித்துவிட்டான். இதை குருக்கள் சிவபெருமானிடம் முறையிட, சிவபெருமான் தனது கணங்களில் ஒன்றை அனுப்பி நீலனின் உயிரை பிரித்துவிட்டார். தகவலறிந்து வந்த நீலி, தனது தரிசனனாக பிறந்திருக்கும் தனது கணவனோடு, சகோதரன் சாவிற்கு காரணமான வேளாளர்களையும் பழிதீர்க்க சபதமேற்றாள்.

இந்த வேளையில் காஞ்சியில் இருந்த தரிசனனுக்கு திடீரென பழையனூர் சென்று வியாபாரம் செய்ய ஆசை வந்தது.‘ வட திசை பயணம் எதிர்பாராத மரணம்’ என்று உற்றார் எச்சரித்தும் கேளாமல், மந்திரக்கத்தி இருக்கும் தைரியத்தில் கிளம்பிவிட்டான். பயணத்திற்கிடையே திருவாலங்காட்டில் அவனை பார்த்துவிட்ட நீலி, அழகிய பெண்ணாக உருவெடுத்து தரிசனனை அணுகினாள். ஆனால் மந்திரக் கத்தி இருந்ததால் அவனை நெருங்க முடியவில்லை.

உடனே நீலி பெரிய கள்ளிக் கட்டையை எடுத்து குழந்தையாக்கி இடுப்பில் வைத்துக் கொண்டு தலைவிரிகோலமாக பழையனூர் பஞ்சாயத்தை கூட்டிவிட்டாள். ‘என் கணவர் இவர் பிரிந்து செல்ல நினைக்கிறார். சேர்த்து வையுங்கள்’ என்று கண்ணீர் விட்டாள். ‘காலையில் பேசலாம். பகக்த்து மண்டபத்தில் தங்குங்கள்’ என இருவரையும் பஞ்சாயத்தார் இணைத்துவைக்க முயன்றனர். ‘ என் கணவர் கோபக்காரர். என்னைக் கொன்றாலும் கொன்றுவிடுவார். அவர் கையில் உள்ள கத்தியையும் வாங்கிக் கொள்ளுங்கள்’ என நீலி கூற, அவ்வாறே அவர்கள் கத்தியை பறித்தனர்.

‘ இது பேய். என்னைக் கொல்ல வந்திருக்கிறது’ என்று தரிசனன் கெஞ்சியும், ‘ தைரியமாக இருங்கள். உங்கள் உயிருக்கு ஆபத்து வந்தால் இங்கு பஞ்சாயத்தில் அமர்ந்திருக்கும் 70 வேளாளர்களும் அப்போதே உயிரை மாய்த்துக் கொள்வோம்’ என்று அருகில் உள்ள சாட்சிபூதேஸ்வரர் கோவிலில் சத்தியம் செய்துகொடுத்தனர்.

நள்ளிரவில் தரிசனனை கொன்று குடலை உருவிவிட்டாள் நீலி. காலையில் இதையறிந்த 70 வேளாளர்களும் சாட்சிபூதேஸவரர் ஆலயம் முன்பு தீக்குளித்து உயிர்விட்டனர். நீலியும் கள்ளிச்செடியான தனது குழந்தையை காலிலிட்டு மிதித்து கொன்றுவிட்டாள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here