சென்னை ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியைச் சேர்ந்த பிரகாஷ் என்பவர் சென்னை மத்தியக் குற்றப்பிரிவில் புகார் ஒன்றை அளித்தார். அந்தப் புகாரில் டிஎல் பாட்டிலிங் நிறுவனத்தைச் சேர்ந்த நந்தகுமார், சண்முகம் மற்றும் ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியின் விற்பனை நிர்வாகிகள் ஹரி, மாதவன்ராம் ஆகியோர் போலியான ஆவணங்களை தங்கள் வங்கியில் கொடுத்து தங்களுக்கும் தங்களுக்கு தெரிந்தவர்களுக்கும் என 103 கிரெடிட் கார்டுகளை வாங்கி உபயோகித்து 75 லட்சம் ரூபாய் மோசடி செய்துள்ளதாக தெரிவித்திருந்தார்.
அப்புகாரின் அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் வழக்கு பதிவு செய்யப்பட்டு நந்த குமார், சண்முகம், ஹரி மற்றும் மாதவன் ராம் ஆகிய 4 பேரும் கைது செய்யப்பட்டனர். 103 கிரெடிட் கார்டுகள் வாங்கிய நபர்களிடமும் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் குற்றவாளிகளுள் ஒருவரான குரோம்பேட்டையைச் சேர்ந்த சண்முகத்தின் குடும்பத்தாருக்கும் கிரெடிட் கார்டுகள் வாங்கிக் கொடுக்கப்பட்டுள்ளதாக விண்ணப்பத்தில் இருந்ததை அடுத்து அவரின் குடும்பத்தாரான ஹம்சா, சுந்தரராஜன், வேதாச்சலம், சிவா மற்றும் தினேஷ் ஆகியோரை விசாரிக்க மத்திய குற்றபிரிவு போலீசார் அழைத்திருந்தனர்.
இந்நிலையில் நேற்று விசாரணைக்கு ஆஜர் செய்யப்பட்ட குற்றவாளி சண்முகம் அம்சா, வேதாசலம் மற்றும் சுந்தரராஜன் ஆகியோர் முறையே தனது அக்கா. மாமா மற்றும் சகோதரன் என்றும் அவர்களின் கிரெடிட் கார்டினை தான்தான் உபயோகித்து மோசடி செய்ததாகவும் அவர்களுக்கு இதில் சம்பந்தமில்லை என்றும் வாக்குமூலம் அளித்தார். இதனையடுத்து இன்று மதியம் 12 மணிக்கு சண்முகத்தின் குடும்பத்தினரான அம்சா (சண்முகத்தின் அக்கா), வேதாச்சலம் (மாமா) மற்றும் சுந்தர்ராஜன் (சகோதரன்) ஆகியோர் மத்திய குற்றப்பிரிவு வங்கி மோசடி பிரிவில் ஆஜராகினர்.
பின்னர் அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர்கள் சண்முகத்திடம் அடையாள அட்டையின் நகலை கொடுத்ததுதான் தெரியும், அதை கொண்டு அவர் கிரடிெட் கார்டுகள் வாங்கி உபயோகித்தது பற்றியெல்லாம் தெரியாது என்று தெரிவித்துள்ளனர். விண்ணப்பத்தில் உள்ள கையெழுத்து அவர்களின் கையெழுத்திற்கு மாறுபட்டிருந்ததால் அவர்களின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டது. முறையே முதலில் ஹம்சாவின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டு பின் மதிய உணவு முடித்து 2.30 மணிக்கு ஆஜரானவர்களில் வேதாச்சலத்தின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டு கொண்டிருந்தபோது அவர் தண்ணீர் கேட்டவாறே மயங்கி விழுந்தார்.
இதனையடுத்து அங்கிருந்த அவரின் மனைவி ஹம்சா மற்றும் குடும்பத்தினர் அவருக்கு முதலுதவி அளித்ததுடன், உடனடியாக அவர்கள் வந்த ஆட்டோவிலேயே அவரை ஏற்றி சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவனைக்கு அழைத்துச் சென்றனர். பின்னர் அவரை பரிசோதித்த மருத்துவர் அவர் இறந்த நிலையில் கொண்டு வரப்பட்டதாக தெரிவித்தார். இது தொடர்பாக வேப்பேரி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அமைந்துள்ள மத்திய குற்றப் பிரிவில் விசாரணைக்காக ஆஜரானவர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.















