3ஆம் நூற்றாண்டு எல்லைக்கல் கண்டுபிடிப்பு

0
1091

சங்கரன்கோவில் அருகே கரிவலம்வந்தநல்லூரிலிருந்து ராஜபாளையம் செல்லும் வழியில் பருவக்குடி கண்மாய் அருகே வைணவ எல்லைக்கல் மற்றும் அய்யனார் கற்சிற்பம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து, தொல்லியல் ஆய்வாளரும், ராஜபாளையம் ராஜூக்கள் கல்லூரி வரலாற்றுத் துறை உதவிப் பேராசிரியருமான முனைவர் கந்தசாமி கூறியதாவது:


பருவக்குடி கண்மாய் அருகே களப்பணியின் போது அங்குள்ள நெல் வயலில் 13 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த எல்லைக்கல் ஒன்றும் அருகே சூரிய காந்தி தோட்டத்தில் 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த அய்யனார் சிற்பமும் கண்டுபிடிக்கப்பட்டது.
எல்லைக்கல் என்று அழைக்கப்படும் இக்கல்லில் வைணவத்தை விளக்கும் பொருட்டு சங்கு, சக்கரம் நாமம் ஆகியவற்றை புடைப்புச் சிற்பத்தில் மிக நேர்த்தியாக செதுக்கப்பட்டுள்ளது. நாலு அடி உயரமும் இரண்டு அடி அகலமும் ஒரு அடி பருமன் கொண்டதாக சிற்பம் அமைந்துள்ளது. சிற்பத்தின் மேற்பகுதி இடது ஓரத்தில் தமிழ் எழுத்துக்களில் “பரு தரை குடி கால் ரு” என்று எழுதப்பட்டுள்ளது. வலது ஓரத்தில் மேற்பகுதியில் ம,ன என்ற ஓரிரு தமிழ் எழுத்துக்கள் காணப்படுகிறது. மற்ற எழுத்துக்கள் சிதைந்துள்ளதால் கல்வெட்டின் முழு வாசகத்தை படிக்க இயலவில்லை.
பருவக்குடி கண்மாய் அருகே கல்வெட்டுடன் சிற்பம் காணப்படுவதால் பருவக்குடி என்று தற்போது அழைக்கப்படும் ஊரை ஆரம்ப காலத்தில் ‘பரு தரை குடி’ என்று அழைக்கப்பட்டு இருப்பதாக தெரிகிறது.

‘கால’ என்பது கால்வாயை குறிப்பதாகவும் ‘ரு’ என்பது ஐந்து என்ற எண்ணை குறிப்பதாக எடுத்துக்கொள்ளும்போது பருவக்குடி கண்மாயின் ஐந்தாவது மடை அல்லது நீர் வெளி வரும் பாதையை குறிக்கும் இடமாக இருக்கலாம். குறிப்பிட்ட கல்வெட்டு எழுத்துக்களைக் கொண்டு உற்றுநோக்கும் வைணவ நிலத்தை அடையாளப்படுத்துவதற்கான எல்லைக்கல் என்று எடுத்துக் கொள்ளலாம்.

சிவன் கோயிலுக்கு தானமாக வழங்க கூடிய பகுதியை தேவதானம் என்றும் வைணவ கோவில்களுக்கு தானமாக வழங்கக்கூடிய நிலங்களை திருவிடையாட்டம் என்றும் அழைப்பார்கள். அந்த வகையில் வைணவ நிலத்தை குறிக்கும் எல்லைக்கல்லில் ஊர் பெயரையும் கல்வெட்டில் வெட்டப்பட்டுள்ளது சிறப்புக்குரியதாகக் கருதப்படுகிறது.
சின்னுக்கோனார் காடு என்று அழைக்கப்படும் இவ்வயலில் பாலசுப்பிரமணியம் மற்றும் அவரது குடும்பத்தினர் விதை நடவு காலத்திலும் நெல் அறுவடை காலத்திலும் மற்றும் விசேஷ காலங்களிலும் சிறப்பு பூஜைகள் செய்து இச்சிற்பத்தை சேர்வராயன் என்ற பெயரில் வழிபட்டு வருகிறார்கள்.


அருகே உள்ள சூரியகாந்தி தோட்டத்தில் அமைந்துள்ள அய்யனார் சிற்பம் பூர்ணகலா, புஷ்கலா ஆகியோருடன் அமர்ந்த நிலையில் பட்டைகல்லில் வடிவமைக்கப்பட்டுள்ளது. தலைவிரி சடையுடன் அய்யனார் இடுப்போடு இணைந்த பெல்ட் ஒன்றில் இடது காலை மடக்கி மாட்டியுள்ளவாறும், வலது காலை சற்று கீழே தொங்கவிட்ட நிலையிலும், பூர்ணகலா மற்றும் புஷ்ப கலா இருவரும் இருபுறமும் அமர்ந்த நிலையில் சிற்பம் காணப்படுகிறது. சிற்ப உருவ அமைப்பை கொண்டு 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக கருதப்படுகிறது. சில ஆண்டுகளுக்கு முன் கண்மாய் கரையில் அமைந்துள்ள அய்யனார் சிற்பம் கண்மாய்க்கரை சீரமைப்பின் போது கரையிலிருந்து கீழ் எடுத்துவைத்து வழிபட்டு வருவதாகவும் அங்குள்ள மக்கள் கூறுகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here