தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் ஆடுதுறை அடுத்த மேல் மருத்துவக்குடி பகுதியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவரின் மகன் பிரவீன் (23). கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு குடும்பத்தாருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக வீட்டை விட்டு வெளியேறிய பிரவீன் கோவைக்கு வேலை தேடி வந்தார். கோவை நகரில் ஆங்காங்கே கிடைக்கும் வேலைகளை செய்துகொண்டு கிடைக்கும் இடத்தில் தங்கி இருந்து வந்தார். கொரோனா ஊரடங்கு கடந்த இரண்டு மாதங்களாக அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பிரவீன் சரியான வேலை கிடைக்காமல் மன விரக்தியில் இருந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று இரவு சுமார் 10 மணி அளவில் காந்திபுரம் மேம்பாலம் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்த பிரவீன் பாலத்தின் மேல் இருந்து கீழே சாலையில் குதித்தார். இதில் தலை மற்றும் கை கால்களில் அடிபட்டு ரத்த வெள்ளத்தில் அவர் துடித்தபடி மயங்கி கிடந்தார் .அருகில் உள்ளவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உடனடியாக பிரவீனை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மயங்கிய நிலையில் இருந்த பிரவீன் இடம் போலீசார் விசாரித்த போது வேறு எந்த தகவலையும் தெரிவிக்க மறுத்துவிட்டார்.
இந்நிலையில் பிரவீன் சிகிச்சை பலனளிக்காமல் இன்று காலை பரிதாபமாக உயிர் இழந்தார் .இதுகுறித்து காட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.














