தமிழகத்தில் கடந்த மே மாதம் 10ஆம் தேதி கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதில் ஒரு பகுதியாக தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு டாஸ்மாக் மதுபான கடைகளும் மூடப்பட்டது. இந்நிலையில் ராணிப்பேட்டை மாவட்டம் ரத்தினகிரி அடுத்த தென்னந்தியலம் கிராமத்தில் செயல்பட்டு வந்த அரசு டாஸ்மார்க் கடை கடை எண் 11368ல் நேற்றிரவு பக்கவாட்டு சுவரை துளையிட்டு மதுபான பாட்டில்களை மர்மநபர்கள் திருடியுள்ளனர்.

இதுகுறித்து அருகில் உள்ள விவசாயி ஒருவர் ரத்தனகிரி காவல்நிலையத்திற்கு தகவல் அளித்ததை தொடர்ந்து விரைந்து வந்த போலீசார் அந்த கடையில் பணிபுரியும் சூப்பர்வைசர் ஸ்ரீதர் மற்றும் விற்பனையாளர் சார்லஸ் ஆகியோரை அழைத்து கடையை திறக்கச் செய்து திருடப்பட்ட மதுபான பாட்டில்கள் குறித்து விசாரணை மேற்கொண்டனர். ராணிப்பேட்டை மாவட்ட காவல்கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் மீனா, துணை கண்காணிப்பாளர் பூரணி ஆகியோரும் நேரில் ஆய்வு மேற்கொண்டனர். விசாரணையில் 15 கேஸ் உயர் ரக மதுபான பாட்டில்கள் திருடப்பட்டுள்ளதாகவும் அதன் மொத்த மதிப்பு ரூபாய் ஒரு லட்சத்தி ஐம்பதாயிரம் எனவும் தெரிவித்தனர்.

இதனையடுத்து மதுபான பாட்டில்கள் கொள்ளை குறித்து வழக்குப்பதிவு செய்த ரத்தனகிரி போலீசார் மர்ம நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.














